

ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் அருகில் இருந்து பிள்ளைப்பாக்கம் கூட்டுச்சாலை வரை 3.5 கி.மீ. தொலைவுக்கு ரூ. 15 கோடியில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி தொடங்கியது.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒரு வழிச்சாலையாக இருந்த ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலையை நெடுஞ்சாலைத் துறை கடந்த 2008-ஆம் ஆண்டு ரூ. 7.68 கோடி மதிப்பீட்டில் இருந்து இரண்டு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டது. இதையடுத்து 2011-ஆம் ஆண்டு இச்சாலை மீண்டும் ரூ. 20 கோடியில் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலை சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இச்சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்தது. காலை, மாலை நேரங்களில் இச்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் இருந்து கச்சிப்பட்டு பகுதி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் இச்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் அருகில் இருந்து பிள்ளைப்பாக்கம் கூட்டுச்சாலை வரை 3.5 கி.மீ. தொலைவுக்கு இரண்டு வழிச்சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ. 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்தன. தற்போது பிள்ளைப்பாக்கம் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளை பொக்லைன் இயந்திரம் கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன் நெடுஞ்சாலைத் துறையினர் தொடங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.