

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலதாமதம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அவர் பேசியது:
காவிரி விவகாரத்தில் ஒவ்வொரு முறை நியாயம் கேட்டுச் செல்லும் போதும் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரின் அளவு குறைக்கப்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு நாம் இடம் கொடுத்து விடவும் கூடாது. அதில், தமிழக அரசு கவனமாகச் செயல்பட வேண்டும்.
மிகுந்த கவனம் தேவை: காவிரி இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த அமைக்கப்படும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு இரண்டும் பக்ரா நங்கல் நதிநீர் பங்கீட்டின் அடிப்படையில்தான் என்று நடுவர் மன்றம் தெளிவாகக் கூறியிருக்கிறது. அதேபோல் நிலத்தடி நீரை கணக்கில் எடுத்துக் கொள்வது என்ற வாதத்தில் கோதாவரி மற்றும் கிருஷ்ணா நடுவர் மன்றத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டித்தான் காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அப்படியே ஏற்றுக் கொண்டாலும், கர்நாடகாவுக்கு அதிக நீர்ப்பங்கீடு அளித்துள்ளதையும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமையுங்கள் என்று நேரடியாக மத்திய அரசுக்குச் சுட்டிக் காட்டாமல் இருப்பதையும் நாம் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும்.
உச்சநீதிமன்றத்துக்கு அழுத்தம் தர வேண்டும்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். கடந்த முறை திட்டத்தை உருவாக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது என காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு காலதாமதம் செய்தது. அதுபோன்று, இப்போதும் காலதாமதம் செய்ய அனுமதிக்கக் கூடாது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பொருத்தவரை தமிழகத்துக்குக் குறைக்கப்பட்டுள்ள தண்ணீரான 14.75 டிஎம்சியை திரும்பப் பெறுவதற்கு என்ன வழி என்பது பற்றி அரசு சட்டரீதியாக ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்.
நீர் சேமிப்பு: காவிரிநீர் பெறுவது குறித்த முயற்சிகள் ஒருபுறமிருக்க வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியிருப்பது போல், நீர் பாதுகாப்பு ஆணையம் ஒன்று அமைத்து காவிரி நீர் சேமிப்பு, சிக்கனமாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
தனி அமைச்சகம் தேவை: மழை நீரைச் சேமித்து வைப்பது, வெள்ள காலங்களில் தண்ணீரைச் சேமித்து வைப்பது, குளம், ஏரிகள், ஆறுகள், அணைகள் போன்றவற்றை காலமுறை வாரியாகத் தூர்வாரி ஆழப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ள நீர்பாசனத்தை பொதுப்பணித் துறையிலிருந்து பிரித்து, அதற்குத் தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும்.
வேளாண்மைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கைத் தயாரித்து வெளியிட வேண்டும். காவிரி உரிமையை நிலைநாட்ட அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக முழுமையான ஆதரவைத் தெரிவிக்கும் என்றார் மு.க.ஸ்டாலின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.