அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பாரதியார் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் கணபதியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

பேராசிரியர் பணிக்காக ரூ. 30 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதியின் ஜாமின் மனுவை

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 8:05 pm

DIN

பேராசிரியர் பணிக்காக ரூ. 30 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதியின் ஜாமின் மனுவை இரண்டாவது முறையாக கோவை நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. 
பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசியர் பணிக்காக சுரேஷ் என்பவரிடம் ரூ. 30 லட்சம் லஞ்சம் பெற்றதாக முன்னாள் துணைவேந்தர் கணபதி, அவருக்கு உடந்தையாக இருந்ததாக வேதியியல் துறைப் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோரை பிப்ரவரி 3-ஆம் தேதி கோவை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறகு, ஆளுநர் உத்தரவின்படி இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 
அதே வேளையில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் அறை, அவரது வீடு, பதிவாளர் அலுவலகம், தர்மராஜ் அறை உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தினர். மேலும், பேராசிரியர்கள், ஆராய்ச்சிப் பட்டம் பெற்ற முன்னாள் மாணவர்கள், தற்போது படித்து வரும் மாணவர்கள்உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினர்.
இதனிடையே, பல்கலைக்கழகத்தில் நடத்திய சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யத் தேவையான நடவடிக்கைகளையும் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கணபதி, தர்மராஜ் ஆகியோரை பிப்ரவரி 12 முதல் 16-ஆம் தேதி வரையில் நான்கு நாள்கள் லஞ்ச ஒழிப்பு போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். 
இந்த நிலையில், தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி ஊழல் கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் துணைவேந்தர் ஏற்கெனவே தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
இதைத் தொடர்ந்து கணபதி தரப்பில் ஜாமினில் விடுவிக்கக் கோரி இரண்டாவது முறையாக செவ்வாய்க்கிழமை மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜான்மினோ முன்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது, முன்னாள் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்ட போதும், அவரது வீட்டில் சோதனை நடத்தியபோதும், காவலில் எடுத்து விசாரணை நடத்தியபோதும் லஞ்சம் பெற்றதாகக் கூறப்பட்ட காசோலைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்யவில்லை. எனவே, அவரை தொடர்ந்து சிறையில் அடைக்க முகாந்திரம் இல்லை. 
எனவே, ஜாமினில் விடுக்க வேண்டும் என அவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஞானபாரதி வாதிட்டார். 
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வாதிட்ட அரசுத் தரப்பு வழக்குரைஞர் சிவகுமார், லஞ்சம் பெற்றதாக துணைவேந்தர் கைது செய்யப்பட்ட பிறகுதான் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரை ஜாமினில் விடுவித்தால் உண்மைகளை மறைக்க முயற்சிப்பார். எனவே, அவரை விடுக்கக் கூடாது என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜான்மினோ, கணபதியின் ஜாமின் மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.