பணிக்குத் திரும்பாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை: போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை! 

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பணிக்குத் திரும்பாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை: போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை! 
Published on
Updated on
2 min read

சென்னை: வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் வியாழன் மாலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக மாநிலம் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் ஏராளமான பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வேலை நிறுத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதித்தும், ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை மாலை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

இதர அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மற்ற அரசு ஊழியர்களுக்கு எல்லாம் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழு அமைத்து ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால் போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.

போக்குவரத்து கழகங்களுக்கு இருக்கும் கடுமையான நிதி நெருக்கடி சூழலில் 2.44% ஊதிய உயர்வு என்பது அரசு ஊழியர்களுக்கான 5.57% கு ஒப்பான ஒன்றுதான்.  இதற்கான ஊதிய உயர்வு ஒப்பந்தமானது வியாழன்று கையெழுத்தானது. ஆனால் ஒரு சில ஊழியர் சங்கங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

பேச்சு வார்தையானது காலை 7 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை நடைபெற்றது. ஆனால் மதியம் மூன்று மணி அளவிலேயே பேருந்துகளை ஆங்காங்கு நிறுத்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுளள்னர். அதுவும் ஒரு சில இடங்களில் இரவு என்றும் பாராமல் பேருந்துகளை அப்படியே சாலைகளில் நிறுத்தி விட்டுச் சென்றுள்ளனர். இதன் காரணமாக பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர்.         

நிலைமையைச் சமாளிக்க தாற்காலிக ஊழியர்களை நியமித்து வாகனங்களை இயக்க அரசு முடிவு செய்த பின்னும், வாகனங்களை இயக்க வருபவர்களை தாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊழியர்களின் செய்கைகளை உயர் நீதிமன்றமும் கடுமையாகக் கண்டித்து எச்சரித்துள்ளது. எனவே வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உடனடியாக அதனைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் 

அதேபோல் வியாழன் அன்று எந்த விதமான முன் அறிவிப்பும் இன்றி வேலை நிறுத்தத்தில்  ஈடுபட்ட பொழுது, வாகனங்களை அப்படியே நிறுத்தி விட்டுச் சென்ற ஊழியர்கள் மீது கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com