விலை உயர்வு மட்டுமல்ல, மாநகரப் பேருந்தில் சத்தமே இல்லாமல் நடந்த மற்றொரு சதி!

பேருந்து டிக்கெட் விலையை உயர்த்தி ஏழைகளின் வயிற்றில் அடித்ததோடு நின்றுவிடாமல், சத்தமே இல்லாமல் மாநகரப் பேருந்து போக்குவரத்தில் மற்றுமொரு சதிவேலையும் நடத்தப்பட்டுள்ளது.
விலை உயர்வு மட்டுமல்ல, மாநகரப் பேருந்தில் சத்தமே இல்லாமல் நடந்த மற்றொரு சதி!


சென்னை: பேருந்து டிக்கெட் விலையை உயர்த்தி ஏழைகளின் வயிற்றில் அடித்ததோடு நின்றுவிடாமல், சத்தமே இல்லாமல் மாநகரப் பேருந்து போக்குவரத்தில் மற்றுமொரு சதிவேலையும் நடத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகரப் பேருந்து போக்குவரத்துக் கழகம் இதுவரை இயக்கி வந்த 250 - 300 நெடுந்தூரப் போக்குவரத்துச் சேவைகளை முற்றிலுமாக நிறுத்தி, அனைத்தையும் குறைந்த தூரப் போக்குவரத்துகளாக மாற்றியமைத்துள்ளது.

அதிக பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இதற்குக் காரணம் கூறப்பட்டாலும், ஏற்கனவே டிக்கெட் கட்டண உயர்வால் அதிருப்திக்குள்ளாகியிருக்கும் பயணிகள், தாங்கள் பயணிக்கும் நெடுந்தூர பேருந்துகளைக் காணாமல் திகைத்துப் போயுள்ளனர்.

குறிப்பாக ஆவடி, திருமுல்லைவாயில், மதுரவாயல், சோலிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, அம்பத்தூர், தாம்பரம், வண்டலூர், பாடி, பெருங்களத்தூர், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் இந்த நெடுந்தூரப் பேருந்துகள் ரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தாங்கள் இதுவரை ஒரே பேருந்தில் சென்று வந்த பகுதிகளுக்கு தற்போது 2 அல்லது 3 பேருந்துகளைப் பிடித்துசெல்ல வேண்டிய துயர நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

ஆவடி - வண்டலூர் (70A), சோலிங்கநல்லூர் - தாம்பரம் மேற்கு (91), செங்குன்றம் - தாம்பரம் (114), திருவேற்காடு - தாம்பரம் (111), கொளத்தூர் - தாம்பரம் (170), திருவான்மியூர் - தாம்பரம் (95) ஆகிய பேருந்துகள் குறைந்த தூரப்பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன.

துரைப்பாக்கத்தில் பணியாற்றும் தொழிலாளி ஒருவர் இது பற்றி கூறுகையில், திருவான்மியூர் - தாம்பரம் (துரைப்பாக்கம் வழி) இடையேயான பேருந்து தற்போது குரோம்பேட்டை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால், குரோம்பேட்டை செல்ல 24 ரூபாயும், ( விலை உயர்வுக்கு முன்பு ரூ.12) அங்கிருந்து தாம்பரம் செல்ல 12 ரூபாயும் ( விலை உயர்வுக்கு முன்பு ரூ.6) செலவிட வேண்டியுள்ளது. ஒரு வேளை டீலக்ஸ் பேருந்தில் ஏறிவிட்டால் தாம்பரம் வரவே ரூ.54 ரூபாய் ஆகிவிடுகிறது என்கிறார்.

ஆவடியைச் சேர்ந்த பயணி ஒருவர் எழுதியிருக்கும் கடிதத்தில், ஆவடி - வண்டலூர் இடையே இயக்கப்பட்டு வந்த பேருந்து, மேற்கு புறநகர்ப் பகுதியோடு தெற்கு புறநகர்ப் பகுதியை இணைத்து வந்தது. இதனால் பல பயணிகள் பயன்பெற்று வந்தனர். ஆனால், இந்த போக்குவரத்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த பேருந்துகள் தற்போது குறைந்த தொலைவு பேருந்துகளாக அதாவது, ஆவடி - கோயம்பேடு, கோயம்பேடு - வண்டலூர் என பிரிக்கப்பட்டுவிட்டது. ஆவடி அல்லது அம்பத்தூரில் இருந்து ஒரு பயணி பெருங்களத்தூர் செல்ல வேண்டும் என்றால், அவர்  77 அல்லது 70 ஏ பேருந்து மூலம் கோயம்பேடு வந்து, அங்கிருந்து மற்றொரு பேருந்து பிடித்து பெருங்களத்தூர் செல்ல வேண்டும். இதனால் ரூ.33 முதல் ரூ.35 வரை டிக்கெட்டுக்கு செலவாகும்.

இதேபோல, செங்குன்றம், மாதவரம் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் தாம்பரம் அல்லது வண்டலூர் செல்ல நேரடி பேருந்து சேவை இல்லாமல் தவிக்கிறார்கள். இதில் கல்லூரி மாணவர்களின் நிலைதான் மிக மோசமாகியுள்ளது. செங்குன்றம் - தாம்பரம் இடையே இயக்கப்படும் 114 பேருந்து எப்போதும் கூட்டத்தால் நிரம்பி வழியும். ஆனால் இந்த பேருந்து சேவை தற்போது குறைந்த தொலைவு பேருந்தாக மாறியதால், பயணிகள் கோயம்பேடு சென்று அங்கிருந்துதான் தாம்பரத்துக்கு மற்றொரு பேருந்து ஏற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், மாநகரப் பேருந்தின் இந்த அதிரடி முடிவால் அதிக பயணிகள் பயன்பெறுவார்கள் என்று போக்குவரத்து அதிகாரிகள் விளக்கம் அளிக்கிறார்கள்.

சிஐடியு தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், நெடுந்தூர பேருந்துகளை இயக்குவதால், பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இப்படி குறைந்த தொலைவு பேருந்துகளாக மாற்றும் போது குறைந்த நேரத்திலேயே பேருந்துகள் வருவதால் காத்திருப்பு நேரம் குறையும் என்றும், ஒவ்வொரு பேருந்திலும் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும், இதனால், போக்குவரத்துக் கழகத்துக்கு வருவாயும் அதிகரிக்கும் என்று விளக்கம் அளிக்கிறார்.

நெடுந்தொலைவு பேருந்துகளில் எப்போதும் கூட்டம் அதிகம் இருக்கும், பயணிகள் பல மணி நேரம் நின்றபடி செல்ல வேண்டி வரும். அந்த பிரச்னை இனி இருக்காது என்றும் அவர் கூறுகிறார்.

சென்னையில் சுமார் 48 லட்சம் மக்கள்  பேருந்து பயணத்தை நம்பியே உள்ளனர். 33 பேருந்து பணிமனைகளில் இருந்து 833 வழித்தடங்களில் 3,200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

ஆகமொத்தம், பயணிகளின் சிரமத்தைப் போக்கவே இப்படி நெடுந்தொலைவு பேருந்துகள் அனைத்தும் குறைந்த தொலைவு பேருந்துகளாக மாற்றப்பட்டிருப்பதாக போக்குவரத்துக் கழகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. 

ஆனால், ஒரே பேருந்தில் ஏற்கனவே 10 ரூபாய் கொடுத்த டிக்கெட்டுக்கு விலை உயர்வு காரணமாக தற்போது 20 ரூபாய் கொடுக்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்ட பயணிகள், இரண்டு பேருந்துகளை பயன்படுத்தும்போது கூடுதலாக மேலும் ஒரு 10 ரூபாயை செலவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதால், இரு வழிப் பயணத்துக்கு இரண்டு மடங்கு கூடுதல் செலவை செய்யும் நிலைக்கு தள்ளப்படுவது குறித்து போக்குவரத்துக் கழகங்கள் என்ன விளக்கம் சொல்வார்கள் என்று புரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com