

கட்டுமானத் துறையில் எழுந்துள்ள நெருக்கடியால் பிரதமரின் அனைவருக்கும் வீடு-2022 திட்ட இலக்கை எய்தமுடியாமல் தமிழகம் தடுமாற்றத்தில் உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் எழுந்துள்ள கடும் மணல் தட்டுப்பாடு, சிமென்ட் விலை உயர்வு, மனை விற்பனை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் சட்டம் (ரெரா) ஆகியவற்றால் மலிவு விலை வீடு, அனைவருக்கும் வீடு என்பது கேள்விக் குறியாகி வருகிறது.
2022-க்குள் அனைவருக்கும் வீடு என்ற அடிப்படையில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜானா எனும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 2015-2022 காலத்துக்குள் இதனை சாத்தியப்படுத்த முதல்கட்டமாக 500 நகரங்களை தேர்வு செய்து செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
பயனாளிகள்: இத்திட்டத்தின்படி, விண்ணப்பதாரரின் குடும்பத்தினருக்கு இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் நிரந்தர வீடு இருக்கக் கூடாது. விண்ணப்பதாரர் அல்லது குடும்பத்தினர் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தில் இதற்கு முன்பு எந்த ஒரு சலுகையும் பெற்றிருக்க கூடாது. குடிசை அல்லது ஓட்டு வீட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். பயனாளிகள் பெயரில் பட்டா அல்லது பதிவுபெற்ற பத்திரம் இருக்க வேண்டும். மாத வருமானம் ரூ.25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். திருமணமான தம்பதிகள் தனியாகவோ அல்லது சேர்ந்தோ ஒரே ஒரு வீடு மட்டுமே இந்த சலுகையின் கீழ் பெற முடியும். பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு அதிகபட்ச ஆண்டு வருமானம் ரூ.3 லட்சமும், குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் 6 லட்சம் வரையிலும் உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மானியம்: குடும்பத்தில் பெண் உறுப்பினர்களுக்கு இந்தத் திட்டம் முன்னுரிமை அளிக்கிறது. நலிந்த பிரிவினர் (இடபிள்யூஎஸ்) மற்றும் குறைந்த வருவாய் ஈட்டுவோர் (எல்ஐஜி) , நடுத்தர வருவாய் ஈட்டுவோர் (எம்ஐஜி)
ஆகியோருக்கு முறையே 6.5, 4, 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத்தொகை வீட்டுக்கடன் கணக்கில் வழங்கப்படுவதால், மாதத் தவணை வெகுவாக குறையும். மேலும், வீடு கட்ட ரூ.2.10 லட்சம் நான்கு தவணைகளில் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ல்ம்ஹஹ்ம்ண்ள்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாக அனுப்பலாம். நேரடியாக வங்கி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
மாநிலங்களுக்கு ஒதுக்கீடு: தமிழகத்தில் 3.35 லட்சம் வீடுகளுக்கு ரூ.11,987 கோடிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.5,090 கோடி வழங்குகிறது. இதேபோல, ஆந்திரத்தில் 5.41 லட்சம் வீடுகளுக்கு ரூ.31,056 கோடி, மத்தியப்பிரதேசத்தில் 2.03 லட்சம் வீடுகளுக்கு ரூ.9,282 கோடி, குஜராத்தில் 1.72 லட்சம் வீடுகளுக்கு ரூ.2,493 கோடி, மேற்கு வங்கத்தில் 1.44 லட்சம் வீடுகளுக்கு ரூ.15,868 கோடி, மகாராஷ்டிரத்தில் 1.44 லட்சம் வீடுகளுக்கு ரூ.15,868 கோடி, உத்தரப்பிரதேசத்தில் 1.20 லட்சம் வீடுகளுக்கு ரூ.4,767 கோடி, ஜார்க்கண்டில் 96 ஆயிரம் வீடுகளுக்கு ரூ.3,561 கோடி, பிகாரில் 88 ஆயிரம் வீடுகளுக்கு ரூ.3,915 கோடிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சதுர அடி எவ்வளவு?: இத் திட்டத்தில் நலிந்த பிரிவினர் 60 சதுர மீட்டரில் (645 சதுர அடி) ரூ.6 லட்சம் மதிப்பில் வீடு பெறலாம். நடுத்தர வருவாய் பிரிவில் 90 சதுர மீட்டர் (968 சதுர அடி) ரூ.12 லட்சம் வரையிலும், 110 சதுரமீட்டரில் (1184 சதுர அடி) ரூ.18 லட்சம் வரையில் வீடு பெறலாம். இதற்கு, நலிந்த பிரிவினருக்கு வட்டி மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.6 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடுத்தர வருவாய் பிரிவில் வட்டி மானியத்துடன் ரூ.9 முதல் ரூ.12லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
1 கோடி வீடுகள்: இத் திட்டத்தில் 2019ஆ ம் ஆண்டுக்குள் ஒரு கோடி கிராமப்புற வீடுகள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் மாநில அரசுகளால் நிர்மாணிக்கப்படும் வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால், தமிழகத்தில் கட்டுமானத்தொழில் கடும் நெருக்கடியை சந்தித்துள்ள சூழலில் பிரதமரின் இந்தத் திட்டம் வேகமெடுக்கவில்லை. ஆந்திரம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் சிமென்ட் விலை தமிழகத்தில் மூட்டை ஒன்றுக்கு கூடுதலாக ரூ.170 வரை வழங்க வேண்டியுள்ளது. குவாரிகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் ஆற்று மணலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மூன்று மடங்கு கூடுதல் விலைக்கு மணல் கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. மேலும், ஜிஎஸ்டி அமலாகியுள்ளதால் இரும்புக் கம்பி, மரச் சாமான்கள், ஒயர்கள், பிளாஸ்டிக் பைப்புகள் உள்ளிட்ட கட்டுமானத்துக்கான தளவாட பொருள்களின் விலையும் 15 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துவிட்டன. இதனால், நலிந்த பிரிவினர், நடுத்தர வருவாய் பிரிவினருக்கு அரசு அனுமதியளிக்கப்பட்ட தொகையில் வீடு கட்டுவது என்பது கடும் சிரமமாக உள்ளது. கட்டுநர்களும் இந்தத் தொகைக்கு கட்டித்தர முன்வருவதில்லை. ஏற்கெனவே எடுக்கப்பட்ட வீடுகளும் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்படாமல் நீண்டு கொண்டே செல்கிறது. தமிழகத்தில் திட்டத்தின் நோக்கம் நிறைவேற வேண்டுமெனில் ரெரா சட்டத்தில் மலிவுவிலை வீடுகளுக்கு சிறப்பு சலுகை, ஜிஎஸ்டி விலக்கு, வட்டி மானியம் அதிகரிப்பு, அரசு அனுமதியளிக்கும் தொகையை உயர்த்துவது ஆகியவற்றால் மட்டுமே சாத்தியமாகும் என்கின்றனர் கட்டுமானத் துறையினர். இதில், தட்டுப்பாடின்றி மணல் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக உள்ளது. இல்லையெனில் இப்போது தடுமாற்றத்தில் உள்ள தமிழகம், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் தடம் பதிக்காமல் போகும் சூழலே உள்ளது. ஏனெனில், திட்ட இலக்குக்கு (3.35லட்சம் வீடுகள்) இன்னும் 4 ஆண்டுகளே உள்ளன. இதுவரை 20 சதவீதம் கூட முழுமை பெறவில்லை.
இதுதொடர்பாக, இந்திய மனை விற்பனை மேம்பாட்டாளர்கள் சம்மேளனம் (கிரடாய்) திருச்சி பிரிவு தலைவர் பி. ரவிச்சந்திரன் கூறியது:
தமிழத்தில் கட்டுமானத் தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண தமிழக அரசின் தொடர்ச்சியான நடவடிக்கை அவசியமானது. குறிப்பாக மணல் தட்டுப்பாட்டு பிரச்னைக்கு தீர்வு காண இறக்குமதி மணலுக்கு அனுமதியளிக்க வேண்டும். பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்துக்கு மட்டும் மத்திய, மாநில அரசுகள் சிறப்புச் சலுகைகள் வழங்க வேண்டும். இல்லையெனில் மலிவு விலை வீடு, அனைவருக்கும் வீடு என்பது சாத்தியமாகாது. ஏனெனில், வீடு கட்டும் செலவில் முன்பிருந்ததைவிட சதுர அடிக்கு ரூ.300 முதல் 500 வரை அதிகரித்துள்ளது. வங்கிக் கடனுக்கான வட்டி மானியம் அதிகரிப்பு, கட்டுமானப் பொருள்களுக்கு சலுகை விலை, ஜிஎஸ்டி தளர்வு, கடன் உச்ச வரம்பு அதிகரிப்பு ஆகியவற்றில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.