தமிழகத்துக்கு 31.24 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் - காவிரி ஆணையம் உத்தரவு

தமிழகத்துக்கு ஜூலை மாதத்துக்காக 31.24 டிஎம்சி தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்துக்கு 31.24 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் - காவிரி ஆணையம் உத்தரவு

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முதலாவது கூட்டம் தில்லி ஆர்.கே.புரத்தில் உள்ள மத்திய நீர் ஆணையத்தின் சேவா பவனில் இன்று திங்கள்கிழமை 11 மணியளவில் தொடங்கியது. 

இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் ஆணையத்தின் உறுப்பினரும், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலருமான எஸ்.கே. பிரபாகர், காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் ஆர். சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதேபோல், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இந்த கூட்டம் சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடகா ஜூலை மாதத்துக்காக தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீர் குறித்து இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள அடுத்த கூட்டத்தில் விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  

இந்த கூட்டத்துக்குப் பிறகு காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் ஹூசைன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார், 

அப்போது அவர் கூறியதாவது, 

அனைவரின் ஒத்துழைப்போடு இந்த முதல் கூட்டம் நன்றாக நடைபெற்றது. நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் கட்ட கூட்டம் என்பதால் அடிப்படை விஷயங்கள் குறித்து விவாதித்தோம். இந்த ஆணையத்துக்கான சட்டதிட்டம், ஆணையத்தின் ஊழியர்கள், தனி அலுவலகம், ஆணையத்தின் பணிகள், தேவையான கட்டுமானம், நீர் இருப்பு, நீர் திறப்பு அளவு குறித்து விவாதிக்கப்பட்டது. 

கர்நாடகம், தமிழகத்துக்கு ஜூலை மாதம் தர வேண்டிய தண்ணீர் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் தமிழகத்துக்கு 3 டிஎம்சி தண்ணீர் உபரியாக வழங்கப்பட்டுள்ளது. அதனால், வரும் ஜூலை மாதம் அந்த 3 டிஎம்சி தண்ணீரை தவித்து மீதமுள்ள தண்ணீரை திறந்துவிட வேண்டும். நீரின் அளவு சரியாக அளவிட்டு தெரிவிக்கப்படும். 

தற்போது கர்நாடகத்தில் மழைக்காலம் நன்றாக உள்ளது. அதனால், இந்த ஆணையம் 1 வருடத்துக்கான தீர்ப்பை ஒரே கட்டத்தில் வழங்காமல், தேவைப்படும் நேரத்தில் கூட்டம் நடத்தி அவ்வப்போது கூட்டங்கள் கூட்டி அனைவரிடமும் கேட்டறிந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். ஆணையத்தின் உத்தரவை 4 மாநிலங்களும் மதித்து ஒத்துழைப்பு வழங்கும் என நம்புகிறோம். 

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உத்தரவு என்பது மதிப்பதற்காக. அதனால், எங்களது உத்தரவை மாநிலங்கள் மதிக்க வேண்டும். 

கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. தொடக்கத்திலேயே நம்பிக்கை இழந்து பேச விரும்பவில்லை. காவிரி ஒழுங்காற்று குழு ஆணைய கூட்டம் 4-ஆம் தேதி நடைபெறும்" என்றார்.  

அதன்படி தமிழகத்துக்கு ஜூலை மாதத்துக்காக கர்நாடகம் 34 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 3 டிஎம்சி உபரி நீர் வழங்கியுள்ளதால் ஜூலை மாதத்துக்கு 31.24 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும். 

முன்னதாக, 
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பான அறிவிக்கை அரசிதழில் ஜூன் 1-ஆம் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றுக்கு தலைவர், உறுப்பினர்களை நியமித்து மத்திய அரசு கடந்த ஜூன் 22-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. 

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசைன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முதலாவது கூட்டம், தில்லி ஆர்.கே. புரத்தில் உள்ள மத்திய நீர் ஆணையத்தின் சேவா பவனில் இன்று திங்கள்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com