மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு அரசியல் தன்மைகள் கொண்ட நம் நாட்டில், மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் என்ற மத்திய அரசின் திட்டம் சாத்தியமில்லாதது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர், சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை மேலும் கூறியது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 4 ஆண்டுகளில் மக்களுக்கு உபயோகமான எந்தத் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தவில்லை. மாறாக நாட்டின் ஜனநாயகத்தின் மீதும், அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் பெரும் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர் மீதான தாக்குதல் பாஜக ஆட்சியில் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்பாற்ற ஜனநாயக சக்திகள், இடதுசாரி, மதசார்பற்ற அமைப்புகள் ஓரணியில் திரள வேண்டும். அதற்கான பணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இறங்கி உள்ளது. கடந்த மக்களவை தேர்தலின்போது, நாட்டுக்கு நல்ல காலம் பிறந்து விட்டதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால், மாறாக பெரு நிறுவனங்களுக்கும், மக்களின் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு வெளிநாடுகளில் பதுங்கி உள்ளவர்களுக்குமே தற்போது நல்ல காலம் ஏற்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமில்லை: மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு என்ற பெயரில் மாநில அரசுகளின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. பொருளாதாரம், கல்வித் துறையில் மாநில அரசுகளுக்கு உள்ள பெருமளவு அதிகாரங்கள் பறிக்கப்பட்டுவிட்டன. கூட்டாட்சி தத்துவத்தின்படி மத்திய அரசு நடப்பதில்லை. பல மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில், மக்களைத் திசை திருப்புவதற்காக நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.
மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு அரசியல் தன்மைகள் கொண்ட நம் நாட்டில் மக்களவைக்கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது சாத்தியமே இல்லை. அதற்குப் பதில் தேர்தல் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முன்வர வேண்டும்.
அமித்ஷாவின் வருகை ஒரு மாயை: அண்மையில் நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் பாஜக தோல்வியைச் சந்தித்து வருகிறது. இந்த நேரத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் வருகை தமிழகத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. அதுமட்டுமில்லாமல், தமிழகத்தின் அரசியல் வரலாறு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது என்பதை அமித்ஷா வெகு விரைவில் புரிந்து கொள்வார். அவரது தமிழக வருகை வெறும் மாயை.
வரவேற்பு: மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே உறவுகள் சீர்கெட்டு வரும் நிலையில், திமுகவின் மாநில சுயாட்சி மாநாடு வரவேற்கத்தக்கது. மாநில உரிமைகள் குறித்து விவாதிப்பதற்கும், இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்கும் இந்த மாநாடு வாய்ப்பாக அமையும் என்றார் டி.ராஜா.
இந்தச் சந்திப்பின்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கவனம் ஈர்த்த அர்ஜுன் தாஸ் பட புரோமோ!

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

விஜய் லாலிபாப் சாப்பிடும் லிட்டில் பாய்: பிரேமலதா கடும் தாக்கு

இருவருக்கு ரெட் கார்டு: ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பயர்ன் மியூனிக்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


