லோக் ஆயுக்த மசோதாவுக்கு எதிர்ப்பு: திமுக - காங்கிரஸ் வெளிநடப்பு
லோக் ஆயுக்த மசோதா, அதிகாரம் இல்லாத பல் இல்லாத மசோதா போன்று இருப்பதாகக் கூறி திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.


லோக் ஆயுக்த மசோதா, அதிகாரம் இல்லாத பல் இல்லாத மசோதா போன்று இருப்பதாகக் கூறி திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
லோக் ஆயுக்த சட்டமசோதா ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது: தமிழ்நாடு லோக் ஆயுக்த சட்ட முன்வடிவைக் கொண்டுவந்து லோக் ஆயுக்த அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழக அரசின் சட்ட மசோதாவில் முதல்வரை விசாரிக்கும் அதிகாரமும் லோக் ஆயுக்தவுக்கு உண்டு என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
வெளிப்படைத் தன்மைக்கு உதவாது : லோக் ஆயுக்த தலைவரைத் தேர்வு செய்யும் பொறுப்பில் முதல்வர், பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் என மூன்று பேர் மட்டுமே இடம்பெற்றிருப்பது வெளிப்படைத் தன்மைக்கு நிச்சயம் உதவாது. அதனால், தலைவரைத் தேர்வு செய்யும் குழுவில் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரும், துறையைச் சார்ந்திருக்கும் அனுபவம் வாய்ந்த அதிகாரி ஒருவரையும் கூடுதலாகச் சேர்க்க வேண்டும்.
தெளிவு தேவை: மேலும், லோக் ஆயுக்த அமைப்புக்கான உறுப்பினர் பொறுப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் அல்லது சட்டப்பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தெளிவு தேவை. அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அப்படி இல்லையென்றால் மட்டுமே பெரும்பான்மை உறுப்பினர்களின் கட்சியின் தலைவர் உறுப்பினராக நியமிக்கப்படுவார் என்று சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும்.
கண்டனம்: லோக் ஆயுக்த தலைவராக உயர் நீதிமன்ற நீதிபதியோ அல்லது ஊழல் தடுப்பு கொள்கை, பொது நிர்வாகம், சட்டம் நிதி, விழிப்புணர்வு உள்ளிட்ட துறைகளில் 25 ஆண்டுகள் அனுபவமிக்க ஒருவரை நியமிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது லோக் ஆயுக்த அமைப்பினை அதிகாரிகள் தலைமையிலான அமைப்பாக மாற்றக் கூடிய முயற்சியாகத் தெரிகிறது. இதனைக் கண்டிக்கிறோம்.
நோக்கம் சரியா?: லோக் ஆயுக்தவுக்கு உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் மட்டும்தான் தலைவராக இருக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டு வரவேண்டும். அரசு ஒப்பந்தங்கள் பற்றிய புகார்களை விசாரிக்க முடியாது. அரசின் பதவி நியமனம் தொடர்பான புகார்களை விசாரிக்க முடியாது. உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளோர் மீதான புகார்களை விசாரிக்க முடியாது என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் லோக் ஆயுக்த எதற்காக அமைக்கப்படுகிறதோ, அந்த நோக்கமே பாழ்படுத்தப்பட்டுள்ளது. இதனை உடனடியாக நீக்க வேண்டும்.
புலனாய்வு அமைப்பாக இல்லை: எனவே, லோக் ஆயுக்த அமைப்பு துறை சார்ந்த விசாரணைக் குழுவாக உருவாக்கப்பட்டு இருக்கிறதே தவிர, புலனாய்வு அமைப்பாக இல்லை. சுதந்திரமாகச் செயல்படக்கூடிய அமைப்பாகவும் இல்லை. அதனால், நான் (ஸ்டாலின்) சொல்லியிருக்கும் திருத்தங்களை எல்லாம் மேற்கொள்ள வேண்டும். அதுவரை இந்த மசோதாவைத் தெரிவுக் குழுவுக்கு அனுப்பி, பின்னர் கலந்து பேசி ஒரு முடிவெடுக்க வேண்டும் என்றார்.
இதே கருத்துகளை காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முஸ்லிம் லீக் உறுப்பினர் அபுபக்கரும் எழுப்பி, மசோதாவை நிறைவேற்றாமல் தெரிவுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரினர்.
அதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியது: லோக் ஆயுக்த அமைப்பு தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில்தான் சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. முதல்வரையும் விசாரிக்கும் வகையில்தான் இந்த மசோதா உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தில்கூட 101 முறைக்கு மேல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால், எதிர்க்கட்சித் தலைவர் கோரும் விஷயங்கள் குறித்து ஆய்வு செய்து, பிறகு திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
அமைச்சர் சி.வி.சண்முகம்: பிற மாநிலங்களில் உள்ள லோக் ஆயுக்த சட்டத்தை எல்லாம் முழுமையாக ஆய்ந்துதான் சிறந்த வகையில் இந்த சட்டமசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின்: இந்த சட்ட மசோதா ஒரு அதிகாரம் இல்லாத அமைப்பாக, பவரும் பல்லும் இல்லாததாக மசோதாவாக உள்ளது. எனவே, பேரவையின் தெரிவுக் குழுவுக்கு அனுப்ப வலியுறுத்துகிறேன். தெரிவுக் குழுக்கு அனுப்ப முடியாத நிலையில் நாங்கள் வெளிநடப்பு செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.
அந்தக் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும், முஸ்லிம் லீக் உறுப்பினர் அபுபக்கரும் வெளிநடப்பு செய்தனர்.
அதன் பிறகு லோக் ஆயுக்த சட்டமசோதா குறித்து பேரவைத் தலைவர் தனபால் குரல் வாக்கெடுப்பு நடத்தி, ஒரு மனதாக மசோதா நிறைவேறியதாக அறிவித்தார்.
2 நிமிஷம் அமைதியில் ஆழ்ந்த பேரவை
லோக் ஆயுக்த சட்ட மசோதாவை நிறைவேற்றாமல் தெரிவுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்; இல்லாவிட்டால் வெளிநடப்பு செய்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதற்கு அதிமுக தரப்பில் இருந்து உடனடியாக என்ன பதில் கூறுவது எனத் தெரியாமல், சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதே சமயம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதர அமைச்சர்களும் மற்றவர்களோடு ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனால், 2 நிமிஷங்கள் அவை பரபரப்புடன் காணப்பட்டதுடன் அவை நிகழ்வுகள் எதுவும் நடைபெறாமல் அமைதியில் ஆழ்ந்தது.
பிறகு, அமைச்சர் சி.வி.சண்முகம் அவரது இருக்கையில் இருந்து எழுந்து சுற்றி வந்து, முதல்வரிடம் ஆலோசனையில் ஈடுபட்டு ஒரு முடிவு எடுத்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து தெரிவுக் குழுவுக்கு அனுப்பப்படாது என்ற முடிவைத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து திமுகவினர்
வெளிநடப்பு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...