போலீஸை தாக்கியது தவறுதான்.. அதற்காக? ரவுடி ஆனந்தனின் சகோதரி எழுப்பும் புல்லட் கேள்விகள்
கடந்த வாரம் ரோந்துப் பணியில் இருந்த காவலர் ராஜவேலுவைத் தாக்கிய ரவுடி ஆனந்தன், தன்னைப் பிடிக்க வந்த காவல்துறையினரை தாக்க முயன்றதால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.


சென்னை: கடந்த வாரம் ரோந்துப் பணியில் இருந்த காவலர் ராஜவேலுவைத் தாக்கிய ரவுடி ஆனந்தன், தன்னைப் பிடிக்க வந்த காவல்துறையினரை தாக்க முயன்றதால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்த போதும், தற்காப்புக்காகவே ரவுடி ஆனந்தனை சுட்டுக் கொன்றதாக காவல்துறை கூறுகிறது.
ரவுடி ஆனந்தன் யார்? இதுவரை அவர் மீது 3 கொலை முயற்சி வழக்குகள், பெண் கொடுமை, சட்டத்துக்கு விரோதமாக கும்பல் சேர்வது, 6 தாக்குதல் வழக்குகள் உள்ளன. இதுவரை 6 வழக்குகளில் தண்டனையும் பெற்றுள்ளார்.
கடந்த வாரம் ரோந்துப் பணியில் இருந்த காவலர் ராஜவேலுவைத் தாக்கியக் குற்றத்துக்காக, ஆனந்தனைத் தேடி வந்த காவல்துறையினர், அவரது தாய் ஜெயலலிதாவை பிடித்துச் சென்றனர். நாள் முழுவதும் சிறையில் இருந்த தாய்க்கு, தொலைக்காட்சி மூலமாகத்தான் தனது மகன் என்கவுண்டர் செய்யப்பட்டது தெரிய வந்தது.
எனது மகன் காவல்துறையினரையே தாக்கி விட்டான். காவல்துறையை தாக்கினால் என்னவாகும் என்று மக்களுக்கு பாடம் புகட்டவே, என் மகனை என்கவுண்டர் செய்து விட்டார்கள். காவல்துறையை யார் தாக்கினாலும் அவர்களுக்கு துப்பாக்கிச் சூடுதான் என்று கண் கலங்கக் கூறுகிறார் தாய் ஜெயலலிதா.
ஆனந்தன் செய்தது சரி என்று நான் நியாயப்படுத்தவில்லை. காவல்துறையினரை தாக்கியிருக்கவேக் கூடாது. அதுவும் 16 இடங்களில் காவலரைத் தாக்கிப் படுகாயமடையச் செய்துள்ளான். அவனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனைக் கூட விதித்திருக்கலாம். ஆனால் அவனைக் கொன்று, அவனது இரண்டு குழந்தைகளை அனாதைகளாக்கி, மனைவியை விதவையாக்கியிருப்பது எந்த வகையில் நியாயம்? என்கிறார் ஆனந்தனின் சகோதரி.
இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு பேசுகையில், கடந்த 20 ஆண்டுகளில் 23 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர். அனைத்து வழக்குகளிலும் தற்காப்புக்காகவே என்கவுண்டர் செய்ததாக காவல்துறை கூறுகிறது. இது குறித்து மனித உரிமைகள் ஆணையம் கூறுவது என்னவென்றால், என்கவுண்டர் குறித்து நிச்சயம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். விசாரணை நடத்தி, என்கவுண்டரில் ஈடுபட்ட காவலர் தற்காப்புக்காக செய்தது உறுதி செய்யப்பட வேண்டும் என்கிறது. குற்றவாளிகளை சுட்டுக் கொல்வது நியாயமல்ல என்று தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற என்கவுண்டர் வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், என்கவுண்டர் வழக்கில் தொடர்புடைய காவலருக்கு, அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும்வரை சலுகைகள் எதுவும் வழங்கப்படக் கூடாது என்று கூறியிருந்தது.
இது குறித்து முன்னாள் டிஜிபி ஆர். நட்ராஜ் கூறுகையில், என்கவுண்டர்களை திட்டமிட முடியாது. தற்காப்புக்காகவே போலீஸ் என்கவுண்டரில் ஈடுபடும். ஆனால், கடைசிபட்சத்திலேயே காவல்துறையினர் ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
காவலரைத் தாக்கிய ரவுடி ஆனந்தன் என்கவுண்டர் செய்யப்பட்டதில், தற்காப்பு என்று காவல்துறை கூறினாலும், சட்ட வல்லுநர்களும், சமூக ஆர்வலர்களும், இதுபோன்ற நடவடிக்கை முடிவுக்கு வர வேண்டும் என்றும், இது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் கருத்துக் கூறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...