திமுக கொடியை எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி ஏற்றுவதா? யாரோ முணுமுணுப்பது காதில் கேட்கிறது

திமுகவின் நீண்ட நெடும் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக, எந்தக் கட்சிப் பதவியையும் வகிக்காத  உதயநிதி ஸ்டாலின் கட்சிக் கொடியை ஏற்றவிருக்கிறார்.
திமுக கொடியை எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி ஏற்றுவதா? யாரோ முணுமுணுப்பது காதில் கேட்கிறது
Updated on
1 min read


சென்னை: திமுகவின் நீண்ட நெடும் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக, எந்தக் கட்சிப் பதவியையும் வகிக்காத  உதயநிதி ஸ்டாலின் கட்சிக் கொடியை ஏற்றவிருக்கிறார்.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் ஒரு அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதாவது, திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்ததினத்தை முன்னிட்டு திமுக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக ஜூலை 15ம்  தேதி காஞ்சிபுரத்தில் 7 இடங்களில் திமுக கொடியை உதயநிதி ஸ்டாலின் ஏற்றி வைக்க உள்ளார் என்பதே அது.

இது சிலரது புருவங்களை உயர்த்த வைத்துள்ளது. கருணாநிதியின் பேரனும், எதிர்க்கட்சி மற்றும் செயல் தலைவர் மு.க. ஸ்டாலினின் மகனுமான நடிகர் உதயநிதி ஸ்டாலின் திமுகவின் கொடியை ஏற்றுவதற்கு, ஏன் சிலர் புருவங்களை உயர்த்த வேண்டும் என்று கேட்கலாம்.

அதாவது பல்வேறு கொள்கைகளை வகுத்து அதனை மீகத் தீவிரமாக கடைபிடித்து வரும் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுக, அதன் கட்சிக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவதற்கு என்று சில கட்டுப்பாடுகளை வைத்துள்ளது.

இது மிகவும் அசாதாரணமான விஷயமாக உள்ளது. நான் இதற்கு முன்பு இதுபோன்ற ஒரு விஷயத்தைக் கேட்டதே இல்லை. திமுகவில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், கட்சியின் தலைவர்கள் அல்லது மூத்தத் தலைவர்கள் மட்டுமே கட்சிக் கொடியை ஏற்ற அழைக்கப்படுவார்கள். திமுக செயல் தலைவராக இருக்கும் ஸ்டாலினே, இளைஞரணித் தலைவராக பதவியேற்றப் பிறகுதான் திமுக கொடியை ஏற்றினார். 

1980களில் கூட, கருணாநிதியின் மற்ற பிள்ளைகளான கனிமொழியோ, அழகிரியோ கூட கட்சிக் கொடியை ஏற்றியதில்லை. அவர்களுக்கு கட்சிப் பதவிகள் வழங்கப்பட்ட பிறகே அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் திமுகவின் அடுத்த எதிர்காலம் உதயநிதி ஸ்டாலின் என்று தெரியப்படுத்த கட்சித் தலைமை விரும்பும் பட்சத்தில், தற்போது இது பற்றி எதுவும் சொல்வதற்கில்லை என்று கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

திமுகவில் உதயநிதியை முன்னிலைப்படுத்துவதற்கான முதல் நிகழ்ச்சி இது என்று சொல்ல முடியாது. முன்னதாக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அரசு வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக சார்பில் கடந்த பிப்ரவரி 21ம் தேதி நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் போதும், கட்சித் தலைவர்களை எல்லாம் புறந்தள்ளி, முன் வரிசையில் உதயநிதி அமரவைக்கப்பட்டதையும் சிலர் சுட்டிக் காட்டுகிறார்கள்.

ஏற்கனவே குடும்ப அரசியல் என்று திமுக மீது கடுமையான விமரிசனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், இது அந்த குற்றச்சாட்டை மேலும் தீவிரமாக்கும் என்று கட்சித் தொண்டர்களும் கருதுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com