வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இடி தாக்கியதில் தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுர சிற்பம் சேதம்

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை மாலை பெய்த பலத்த மழையின்போது இடி தாக்கியதில் பெரிய கோயில் கோபுர உச்சியில் உள்ள சிற்ப பாகம் சேதமடைந்தது.

News image
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை மாலை இடி தாக்கியதில் சேதமடைந்த கேரளாந்தகன் கோபுரத்தில் உள்ள கீர்த்திமுக பாகம் (உள்புறத் தோற்றம்).
Updated On :5 ஜூன் 2018, 11:05 pm

DIN

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை மாலை பெய்த பலத்த மழையின்போது இடி தாக்கியதில் பெரிய கோயில் கோபுர உச்சியில் உள்ள சிற்ப பாகம் சேதமடைந்தது.
தஞ்சாவூரில் நெடு நாட்களாகக் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை சற்று பலத்த மழை பெய்தது. அப்போது சில முறை இடி இடித்தது. அப்போது தஞ்சாவூர் பெரியகோயில் நுழைவுவாயிலில் உள்ள கேரளாந்தகன் திருவாயில் கோபுரத்தில் இடி தாக்கியதாகத் தெரிகிறது. இதனால், கோபுர உச்சியில் கலசங்கள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள சுதைச் சிற்பமான வலது புற கீர்த்தி முகத்தில் சிறு பகுதி சேதமடைந்தது. 
அதனருகில் இடி தாங்கி இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பாகங்கள் கோபுரத்தின் உச்சியிலேயே சிதறின. இதில், சில கற்கள் கீழே விழுந்தன.
இதனால் கோபுரத்தின் அருகில் உள்ள காலணி வைப்பகத்தில் குளிர்சாதனப் பெட்டியில் தீப்பொறி ஏற்பட்டதுடன், மின் தடையும் ஏற்பட்டது.
முதல் உயரமான கோபுரம்: மொத்தம் 5 நிலைகள் கொண்ட இக்கோபுரத்தின் உயரம் 90 அடி, அகலம் 54 அடி. மாமன்னன் ராஜராஜசோழன் முடிசூட்டியதும் சேர நாட்டின் மீது கி.பி. 988 ஆம் ஆண்டில் படையெடுத்து சென்று வென்றதன் நினைவாக இக்கோபுரம் கட்டப்பட்டது. பல்லவ, பாண்டிய, முற்காலச் சோழர்கள் உயரம் குறைந்த கோபுரங்களையே எழுப்பி வந்தனர். அப்போது தஞ்சாவூர் பெரியகோயில் நுழைவுவாயிலில் உள்ள முதல் கோபுரமே தமிழகத்தில் எழுந்த உயரமான முதல் கோபுரம் எனக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே இக்கோயிலில் இரண்டாவது நுழைவுவாயில் கோபுரமான ராசராசன் திருவாயிலில் 2010 ஆம் ஆண்டில் இடி தாக்கியதில் கலசங்கள் பெயர்ந்து விழுந்தன. மேலும், 2011 ஆம் ஆண்டில் பெருவுடையார் சன்னதியின் முகப்பில் விரிசல் ஏற்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் கடந்த இக்கோயிலில் அண்மைக் காலத்தில் மூன்றாவது முறையாக தற்போது இடி தாக்கியதில் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.