வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பூனைக்கு யார் மணி கட்டுவது?

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய போர் 12 நாள்களைக் கடந்து நீடித்து வருகிறது.

News image
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க ராணுவ கப்பல்- படம் - ஏபி
Updated On :13 மார்ச் 2026, 10:07 pm

ஆசிரியர்

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய போர் 12 நாள்களைக் கடந்து நீடித்து வருகிறது. இது கடந்த ஆண்டு இந்த நாடுகளுக்கு இடையே நடைபெற்ற "12 நாள்' போர் போன்று குறுகிய காலப் போராக இருக்காது என்பது சில நாள்களிலேயே தெரிந்துவிட்டது. இந்தப் போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு, அதன் தொடர்ச்சியான பொருளாதார பிரச்னைகளை ஒவ்வொரு நாடும் அனுபவிக்கத் தொடங்கிவிட்டது.

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீதும், சவூதி அரேபியா, இராக், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்தும் ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது ஈரான்.

போர் தொடங்கிய அடுத்த நாளே ஹோர்முஸ் நீரிணையை தன் கட்டுப்பாட்டில் ஈரான் கொண்டுவந்தது. ஈரானுக்கும், ஓமனுக்கும் இடையிலான குறுகிய கடல்வழிப் பாதையான இந்த நீரிணை பாரசீக வளைகுடாவை, ஓமன் வளைகுடா மற்றும் அரபிக் கடலுடன் இணைக்கிறது. பல வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி இந்த வழியாகத்தான் சர்வதேசச் சந்தையை அடைகிறது.

மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடுகளான சவூதி அரேபியா, இராக், குவைத், கத்தார், யுஏஇ, பஹ்ரைன் ஆகியவை இந்த நீரிணையைப் பயன்படுத்தி சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்கின்றன. உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் 20% ஹோர்முஸ் நீரிணை வழியாக நடக்கிறது. தோராயமாக ஒரு நாளில் 20 மில்லியன் பீப்பாய் எண்ணெய் இந்த கடல் வழித் தடம் வழியாக கொண்டு செல்லப்படுகிறது என்பதிலிருந்து இந்த நீரிணையின் முக்கியத்துவத்தை அறிய முடியும்.

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், நீண்ட தொலைவு ஏவுகணைகள், ட்ரோன்கள், அதிவிரைவுப் படகுகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்துகிறது. உச்சபட்ச மிரட்டலாக இந்த நீரிணை முழுவதும் கண்ணிவெடிகளையும் ஈரான் பதித்து வருகிறது. இவ்வாறு கண்ணிவெடி பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஈரானின் 16 படகுகளை குண்டு வீசி அழித்துவிட்டதாக அமெரிக்கா தெரிவித்திருந்தும் ஹோர்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதலை ஈரான் தொடர்கிறது.

உலகின் மிகப் பெரிய எண்ணெய் நுகர்வு நாடுகளில் ஒன்றான இந்தியா, தனது கச்சா எண்ணெய்த் தேவையில் 88 சதவீதத்தை 40 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. இயற்கை எரிவாயு தேவையில் 50 சதவீதத்தையும் இறக்குமதி செய்கிறது. சவூதி அரேபியாவிலிருந்து 1.01 மில்லியன் பீப்பாய், இராக்கிடமிருந்து 0.98 மில்லியன் பீப்பாய், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 0.55 மில்லியன் பீப்பாய் இறக்குமதி செய்கிறது.

திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) இறக்குமதிக்கு முழுவதும் வளைகுடா நாடுகளையே இந்தியா நம்பியிருக்கிறது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் ஆகிய நாடுகள் இந்தியாவின் எல்பிஜி இறக்குமதியில் 90 சதவீதம் பங்களிக்கின்றன. ஈரானின் தாக்குதலைத் தொடர்ந்து கத்தார் தனது எல்பிஜி உற்பத்தியை முழுமையாக நிறுத்தியுள்ளது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்தும் எல்பிஜி இறக்குமதி தடைபட்டுள்ளதால் இந்தியாவில் முதல்கட்டமாக எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு விநியோகத்துக்கு முன்னுரிமை வழங்க மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பதால், நாடு முழுவதும் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கிறது. வணிக எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பு தீர்ந்துவரும் நிலையில், உணவகங்கள், விடுதிகள் செயல்படுவது கேள்விக்குறியாகியிருக்கிறது. உணவகங்கள் தங்களது காய்கறி கொள்முதலை நிறுத்தத் தொடங்கியுள்ளன.

சந்தைகளில் காய்கறிகள் தேக்கம், தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு, விவசாயிகளுக்கு நஷ்டம், உணவகங்களை நம்பி வெளியூர்களில் தங்கிப் பணியாற்றுவோரின் நிலை என இதன் தொடர்ச்சியான விளைவுகள் அச்சமூட்டுகின்றன.

இந்தியாவின் தினசரி கச்சா எண்ணெய் நுகர்வு 55 லட்சம் பீப்பாய்களாகும். இதை ஈடுகட்ட ஹோர்முஸ் நீரிணை அல்லாத மாற்று வழிகள் மூலம் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு கொள்முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு பிறப்பித்த அவசரகால உத்தரவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, உள்நாட்டு சமையல் எரிவாயு (எல்பிஜி) உற்பத்தி 25 சதவீதம் உயர்ந்துள்ளது.

தற்காலிக மாற்று ஏற்பாடுகள் எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பது வரும் நாள்களில் தெரிந்துவிடும்.

"எங்கு போர் நடந்தாலும் நான் தலையிட்டு நிறுத்துவேன்' என்று சொன்ன அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேலுடன் சேர்ந்து தான் தொடங்கிய போரால் உலக நாடுகளின் இயக்கத்தையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறார். போரை நிறுத்துவதுதான் உலகம் எதிர்கொண்டுவரும் எரிபொருள் சிக்கலுக்கு ஒரே தீர்வு. அதிபர் டிரம்ப்புக்கு இதை யார் புரிய வைப்பது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.