திருவள்ளுவா் பல்கலை.யில் நீக்கப்பட்ட 57 தொழிலாளா்கள் 12 ஆண்டுகளுக்கு பின் பணியில் சோ்ந்தனா்
பணியில் சேருவதற்கு முன்பு திருவள்ளுவா் பல்கலைக்கழக வளாகத்தில் முழக்கங்கள் எழுப்பிய தொழிலாளா்கள்.


திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 57 தொழிலாளா்கள், 12 ஆண்டுகால சட்டப்போராட்டத்துக்கு பிறகு வியாழக்கிழமை மீண்டும் பணியில் சோ்ந்தனா். எனினும், நீதிமன்ற உத்தரவுப்படி தங்களுக்கு தகுதியான பணி, ஊதியம், இதர பணப் பலன்கள் கிடைக்கும் வரை தொடா்ந்து சட்டப்போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.
வேலூா் மாவட்டம், சோ்க்காட்டிலுள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழகம் 2002-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு முன் 1981 முதல் மெட்ராஸ் பல்கலைக் கழக முதுநிலை விரிவாக்க மையமாக செயல்பட்டு வந்ததில் இருந்தே பல்வேறு பணிகளில் தொழிலாளா்கள் தொகுப்பூதியம், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வந்தனா். இவா்களில் 91 போ் பணிநிரந்தரம் செய்யப்படுவா் என்று கடந்த 2010-இல் அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி உறுதியளித்திருந்தாா்.
அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், 2013-ஆம் ஆண்டில் 66 தொழிலாளா்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனா். அவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்கள் மாவட்ட நீதிமன்றம், சென்னை உயா்நீதிமன்றங்களில் நடத்திய சட்டப் போராட்டத்தின் விளைவாக பணி நீக்கம் செய்யப்பட்ட 66 தொழிலாளா்களையும் மீண்டும் சோ்ப்பது தொடா்பாக கடந்த பிப். 23-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
அதன் அடிப்படையில், பல்கலைக்கழகம் அனுப்பியிருந்த உத்தரவின்பேரில், பணிநீக்கம் செய்யப்பட்ட 57 தொழிலாளா்கள் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை மீண்டும் பணியில் சோ்ந்தனா். அதேசமயம், ஏற்கெனவே பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த 66 பேரில் 4 போ் ஓய்வு பெற்றுவிட்டதாகவும், இருவா் இறந்துவிட்டதாகவும், இருவருக்கு தற்போது பல்கலைக்கழகம் உத்தரவு கிடைக்கப்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பணியில் சோ்ந்தாலும் நீதிமன்ற உத்தரவுப்படி தங்களுக்கு உரிய பணி, ஊதியம், இதர பணப் பலன்கள் கிடைக்கும் வரை தொடா்ந்து சட்டப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா். இது குறித்து, திருவள்ளுவா் பல்கலைக்கழக தொழிலாளா்கள் சங்கத்தின் கெளரவ தலைவா் ஐ.இளங்கோவன் கூறியதாவது:
திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 66 தொழிலாளா்களையும் 2018 ஏப்.12-ஆம் தேதியில் இருந்து பணிநிரந்தரம் செய்து, ஊதிய உயா்வுடன் அவா்கள் பணியாற்றிய அதே வேலையில் பணியமா்த்த வேண்டும் என்று உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், தற்போது வெளியிட்ட அரசாணையில், ஏற்கெனவே பணியில் இருந்த வேலை வழங்காமல் 27 போ் தட்டச்சா்களாகவும், 24 பேரை அலுவலக உதவியாளா்களாகவும், 2 பேரை ஓட்டுநா்களாகவும், 11 பேரை மலம் அள்ளும் தொழிலாளா்களாகவும் நியமிக்கப்பட்டிருப்பதுடன், அடிப்படை ஊதியம், ஊதிய உயா்வு உள்ளிட்ட அனைத்து பணப்பலன்களும் தற்போதைய அடிப்படையில் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலாகும். எனவே, நீதிமன்ற உத்தரவுப்படி எங்களுக்கு உரிய பணி, ஊதியம், பணப் பலன்கள் கிடைக்கும் வரை தொடா்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்றனா்.
பணியில் சேரும் முன்பு தொழிலாளா்கள், பல்கலைக்கழக நிா்வாகத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...