ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

நீட்: அமைச்சர் பதிலுக்கு எதிர்ப்பு: பேரவையில் இருந்து திமுக-காங்கிரஸ் வெளிநடப்பு

நீட் தேர்வு தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பதிலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பேரவையில் இருந்து செவ்வாய்க்கிழமை வெளிநடப்புச்

News image
நீட் தேர்வு பிரச்னை தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து  வெளிநடப்புச் செய்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்.
Updated On :5 ஜூன் 2018, 7:50 pm

DIN

நீட் தேர்வு தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பதிலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பேரவையில் இருந்து செவ்வாய்க்கிழமை வெளிநடப்புச் செய்தன.
மேலும், நீட் தேர்வு விலக்கு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைந்து பெற வேண்டும் என்று அந்தக் கட்சிகள் வலியுறுத்தின.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, நீட் தேர்வு முடிவால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்னை எழுப்பினார். அவர் பேசியது:-
எத்தனை பேரை இழக்கப் போகிறோம்? விழுப்புரம் மாவட்டம் பரவலூர் காலனியை சேர்ந்த மிகவும் சாதாரண கூலித்தொழிலாளியின் மகள் பிரதீபா, மருத்துவராக வேண்டும் என்ற தன்னுடைய நீண்ட நாள் கனவு பொய்த்துப் போன நிலையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இதேபோன்று, செஞ்சி அருகேயுள்ள மேல்சேவூர் கிராமத்தைச் சேர்ந்த கிருத்திகா, தற்கொலை செய்ய முயன்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். நீட் தேர்வினால் கடந்தாண்டு அனிதாவை அநியாயமாக இழந்தோம். இந்த ஆண்டு, தமிழ் வழியில் தேர்வெழுதிய பிரதீபாவை இழந்திருக்கிறோம். இன்னும் எத்தனை பேரை இழக்கப்போகிறோமோ புரியவில்லை.
தமிழ்மொழியில் கேட்கப்பட்டிருந்த நீட் வினாத்தாள் மோசமான பிழைகளுடன் இருந்ததை சுட்டிக்காட்டி, அதை ஈடுகட்டும் வகையில் உரிய மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும், சி.பி.எஸ்.இ. அலட்சியத்தால் மாணவர்கள் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது, என்று ஆதாரங்களோடு பல்வேறு தரப்பினர் எடுத்து வைத்தும்கூட, மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவோ, கணக்கில் எடுத்துக்கொள்ளவோ இல்லை.
தமிழ்மொழி என்றால் மத்திய அரசு தொடர்ந்து காட்டி வரக்கூடிய மாற்றாந்தாய் மனப்பான்மையை நிரூபிப்பதாக இந்த நிகழ்வுகள் எல்லாம் அமைந்திருக்கின்றன.
தென் மாநிலங்களுக்கு பாதிப்பு: நீட் தேர்வு, தமிழகத்துக்கு மட்டுமல்ல, தென் மாநிலங்களில் இருக்கும் மாணவர்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது. வட மாநிலங்களில் இருக்கக்கூடிய மாணவர்கள் அதிக எண்ணிக்கையில், நீட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நீட் தேர்வின் மூலமாக, தமிழக மாணவர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தென் மாநில மாணவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். வட மாநில மாணவர்கள் பரவலாக, அதிகமான அளவுக்கு இதனால் பயனடைந்திருக்கிறார்கள்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டுமென்று, சட்டப் பேரவையில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து, இரு மசோதாக்களை நிறைவேற்றி, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியிருந்தோம். அந்த மசோதாக்கள் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.
நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டுமென்று நிறைவேற்றிய அந்த மசோதாக்களுக்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற, இந்த அரசு இதுவரை எடுத்திருக்கக்கூடிய நடவடிக்கைகள் என்ன என்றார்.
காங்கிரஸ் தலைவர் ராமசாமி: தமிழ் வழியில் கேட்கப்பட்ட கேள்விகளில் தவறுகள் இருப்பதாகக் கூறினார்கள். தவறுகளைச் சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. நீட் தேர்வுக்கான அரசின் பயிற்சி மையங்கள் சரியாகச் செயல்படவில்லை. அதன் விளைவாக 39 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். எனவே, அரசு சிந்தித்து நல்ல முறையில் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என்றார்.
அமைச்சர் பதில்: இதைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார். நீட் தேர்வு கூடாது என்பதே அரசின் கொள்கை. நீட் தேர்வுக்கான வழக்கில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி தமிழகத்துக்கு எதிராக வாதாடினார். மேலும், நீட் தேர்வுக்கான நடவடிக்கைகள் மத்தியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியின் போது மேற்கொள்ளப்பட்டன என்றார்.
திமுக-காங்கிரஸ் வெளிநடப்பு: அமைச்சரின் பதிலைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, அமைச்சர் அளித்த பதில் எங்களுக்கு திருப்தி அளிக்காத காரணத்தால், அவருடைய பதிலைக் கண்டித்து திமுக சார்பில் வெளிநடப்புச் செய்கிறோம்' என்று கூறி அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தார். அவரைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
இதேபோன்று, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.