

சென்னை: அரசு பள்ளி அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த பழங்குடியின (எஸ்.டி.) மாணவர் ஒருவர் கூட இந்த ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதே சமயம், அரசுப் பள்ளி அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த 9 மாணவர்கள் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரி அல்லது தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர வாய்ப்பு உள்ளது.
2017ம் ஆண்டு கட்-ஆப் மதிப்பெண் விவரங்களைக் கொண்டு ஆராயப்பட்டத்தில் இந்த தகவல் கிடைத்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் 5 பேர் மட்டுமே எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
ஊரக மற்றும் பண வசதியில் பின்தங்கிய மற்றும் இன அடிப்படையில் பின்தங்கிய மாணவர்கள் ஏராளமானோர் அரசுப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு, மருத்துவ சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தயாராவதில் பொருளாதார மற்றும் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அதாவது ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்களால், நீட் பயிற்சி மையத்துக்குச் செல்வதும், அதற்கான கட்டணத்தை செலுத்துவதிலும் சிரமம் உள்ளதால், அவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பு எட்டாக்கனியாகிவிட்டது.
வெளியாகியிருக்கும் புள்ளி விவரங்களின் அடிப்படையில், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படித்த 1,344 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் குறைந்த பட்ச மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், இவர்களில் வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே 300க்கு மேல் எடுத்துள்ளனர். 42 பேர் மடடுமே 200க்கு மேல் எடுத்துள்ளனர். 200க்கு மேல் எடுத்த 42 பேரில் 9 பேர் எஸ்சி பிரிவைச் சேர்ந்தவர்கள்.
2017ம் ஆண்டு எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான கட்ஆஃப் மதிப்பெண்ணை ஒப்பிட்டால், எஸ்சி மாணவர்களுக்கு 210 தான் கட்-ஆஃப். எனவே, இந்த 9 மாணவர்களும் அரசு மருத்துவக் கல்லூரியிலோ, அல்லது தனியார் மருத்துவக் கல்லூரியில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்களையோ பெற முடியும். ஆனால், இவர்கள் அனைவருமே பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்தாலும் தனியார் மருத்துவக் கல்லூரிக்கான கட்டணத்தை செலுத்த முடியுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
அதே சமயம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த எஸ்.டி. மாணவர்கள் ஒருவர் கூட 200க்கு மேல் மதிப்பெண் எடுக்கவில்லை. தமிழக அரசு அதிகாரிகளிடம் இது பற்றி கேட்டதற்கு, இன வாரியாக, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை திரட்டவில்லை என்கிறார்கள். ஆனால், இந்த அடிப்படையில் சிபிஎஸ்இ புள்ளி விவரங்களை அளித்துள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வெழுதிய 1.4 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் கட்டணம் செலுத்தி நீட் பயிற்சி மையத்தில் படித்தவர்களாகவே உள்ளனர்.
சில பயிற்சி மையங்கள் ஒரு மாணவருக்கு நீட் பயிற்சி அளிக்க ரூ.1 லட்சத்துக்கும் மேல் கூட வசூலிக்கின்றன. அவை, மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதலே பயிற்சியை ஆரம்பித்துவிடுகின்றன.
முன்பெல்லாம் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களை விட, தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை கிடைப்பது சற்று எளிதாக இருந்தது. ஆனால், நீட் தேர்வினால், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான எம்பிபிஎஸ் வாய்ப்பு முற்றிலுமாக பறிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக 2016ம் ஆண்டு 12ம் வகுப்பு மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்ட போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 30 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றனர். இதில்லாமல் தனியார் மருத்துவக் கல்லூரியிலும் அரசு ஒதுக்கீட்டின் கீழும் மாணவர் சேர்க்கை பெற்றனர். ஆனால், 2017ம் ஆண்டு நீட் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அரசு பள்ளி மாணவர்கள் 2 பேர் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.