

மதுரை: ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வாலுக்கு ஆதரவான தமிழக அரசின் கபட நாடகம் வெளிச்சத்திற்கு வந்து விட்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கானது புதனன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது வழக்கு விவாதங்கள் முடிந்த பின்னர் நீதிமன்ற வளாகத்தில் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த மாபெரும் மக்கள் போராட்டத்தில் 14 மனித உயிர்கள் பலியானது. அதன் பின்னர் ஸ்டெர்லை ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டு ஆலைக்கு சீல் வைத்தது.
ஆனால் அந்த உத்தரவானது முழுமையான ஒன்றாக இல்லாமல், அரசியல் சட்டப் பிரிவு 146-ன் படி ஆலை மூடப்படுவதாக வெறுமனே அதில் கூறப்பட்டிருந்தது. அப்போதே இது முழுமையானது இல்லை; வெறும் கண் துடைப்பான ஒன்றாகும். ஆலை நிர்வாகமானது நீதிமன்றத்திலோ அல்லது பசுமைத் தீர்ப்பாயத்திலோ இதற்கு எதிராக எளிதாக தடை உத்தரவினைப் பெற்று விடும்; அதன் பின்னர் ஆலை செயல்படும் சூழல் ஏற்படும்.
எனவே ஆலை இயங்குவதால் இன்னின்ன பாதிப்புகள் ஏற்படும் என்று தெளிவாக எடுத்துக் கூறி அமைச்சரவை கூடி கொள்கை முடிவு எடுக்கலாம் அல்லது மசோதா ஒன்றினை வெளியிடலாம் என்று நான் அன்றே கூறீனேன். அன்று நான் கூறியதையே இன்று நீதிமன்றமும் வலியுறுத்தியுள்ளது.
எனவே வெறுமே சாதாரணமாக அரசாணை வெளியிட்டு, விலை மதிப்பில்லா மனித உயிர்களுக்கு கொஞ்சம் நிவாரணம் வழங்கி செயல்பட்ட தமிழக அரசுக்கு நீதிமன்றம் புத்தி புகட்டியுள்ளது. இதன் மூலம் ஸ்டெர்லைட்ஆலை உரிமையாளர் அனில் அகர்வாலுக்கு ஆதரவான தமிழக அரசின் கபட நாடகம் வெளிச்சத்திற்கு வந்து விட்டது.
இவ்வாறு வைகோ ஆவேசமாக கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.