/

சிவகாசியில் மது அருந்தி 4 பேர் பலியான சம்பவத்தில் திருப்பம்: சகோதரரைக் கொல்ல கோழிக் குழம்பில் விஷம் கலந்த பெண் கைது

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மதுபானம் அருந்திய 4 பேர் விஷம் கலந்த கோழிக் குழம்பை சாப்பிட்டதால் பலியானது தெரியவந்தது.

News image

போலீஸாரால் கைது செய்யப்பட்ட வள்ளி.

Updated On :26 ஜூன் 2018, 8:47 am IST

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மதுபானம் அருந்திய 4 பேர் விஷம் கலந்த கோழிக் குழம்பை சாப்பிட்டதால் பலியானது தெரியவந்தது. மேலும், சகோதரரைக் கொலை செய்ய திட்டமிட்டு கோழிக் குழம்பில் விஷம் கலந்து வைத்ததாக பெண் ஒருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சிவகாசி லிங்கபுரம் காலனியைச் சேர்ந்த அய்யாத்துரை மகன் கௌதம் (15), தர்மராஜ் மகன்கள் அய்யப்பன் (22), முருகன்( (25), காமராஜபுரம் காலனியைச் சேர்ந்த முனியப்பன் மகன் கணேசன் (20), ஜனார்த்தனன், வேலாயுதம் சாலை பகுதியைச் சேர்ந்த சேக்ஜமாலுதீன் மகன் முகமது இப்ராஹிம் ( 22), விஸ்வநத்தம் பகுயில் வசிக்கும் சுப்புராஜ் மகன் ஹரிகரன் என்ற அந்தோணிராஜ் (24), முருகன் மகன் சரவணன் (22) ஆகிய 8 பேரும் நண்பர்கள். 
இவர்கள் கடந்த சனிக்கிழமை இரவு சிவகாசியில் உள்ள சிறுகுளம் கண்மாய் பகுதிக்குச் சென்று மது அருந்தியுள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இவர்களில், கௌதம், கணேசன், முகமது இப்ராஹிம், முருகன் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
டாஸ்மாக் மதுபானம் அருந்தியதால் 4 பேர் இறந்ததாக பரவிய தகவலால் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
சிவகாசி நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், மது அருந்திய பின்பு விஷம் கலந்த கோழிக் குழம்பை சாப்பிட்டதால் 4 பேரும் இறந்தது தெரியவந்தது.
பலியான முருகனின் சகோதரி வள்ளி (33) குழம்பில் விஷம் கலந்து முருகனை கொலை செய்ய திட்டமிட்டதில், முருகன் உள்ளிட்ட 4 பேர் பலியானது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
முருகனின் சகோதரி வள்ளி அதே பகுதியில் உள்ள அச்சகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். வள்ளிக்கும் அச்சகத்தின் உரிமையாளர் ஜெயராஜ் மகன் செல்வத்திற்கும் (44) தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த முருகன் வள்ளியை கண்டித்துள்ளார். மேலும் முருகன் மது அருந்துவிட்டு வந்து சகோதரியான வள்ளியிடமே தவறாக நடக்க முயன்றாராம். 
இதனால் வள்ளி, முருகனைக் கொலை செய்ய திட்டமிட்டார். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை வள்ளி வீட்டில் முருகன் இறைச்சி உணவு சாப்பிட வருவாராம். அதன்படி, முருகனைக் கொலை செய்யத் திட்டமிட்ட வள்ளி, ஞாயிற்றுக்கிழமை கோழிக் குழம்பு வைத்து, அதில் விஷத்தை கலந்து வைத்துவிட்டு தாய் இந்து ராணியுடன் இருக்கன்குடி சென்றுவிட்டாராம். முருகன் கோழி குழம்பை உண்டு இறந்துவிட்டால், மது அருந்தி தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறி விடலாம் என வள்ளி திட்டம் போட்டுள்ளார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முருகன் தனது நண்பர்கள் 7 பேருடன் வள்ளி வீட்டிற்கு சாப்பிட வந்துள்ளார். எட்டுப் பேரும் விஷம் கலந்த கோழிக் குழம்பை சாப்பிட்டுள்ளனர். இதில் 4 பேர் உயிரிந்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில், போலீஸார் வள்ளியை திங்கள்கிழமை கைது செய்தனர். 
பின்னர் எஸ்.பி. ராஜராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வள்ளி தனது சகோதரர் முருகனைக் கொலை செய்யத் திட்டமிட்டு கோழிக் குழம்பில் விஷம் கலந்துள்ளார். ஆனால், முருகனுடன் அவரது நண்பர்களும் கோழிக் குழம்பை சாப்பிட்டதால் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் மயக்கமடைந்தனர். வள்ளியிடம் தொடர்புவைத்துள்ளதாக கூறப்படும் செல்வத்தின் செல்லிடப்பேசியைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையில் செல்வத்திற்கும் இச்சம்பவத்திற்கும் தொடர்பிருப்பது தெரியவந்தால் அவரையும் கைது செய்வோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.