
சென்னை: திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே எழுதப்படாத ரகசிய கூட்டணி இருக்கிறது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செவ்வாயன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் எட்டு வழிச் சாலை, தமிழக அரசின் அணைப் பாதுகாப்பு சட்ட நிறுத்தி வைப்பு மசோதா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் ஏன் ஒருவருமே ஸ்ரீரங்கம் கோவிலில் தனக்கு வைக்கப்பட்ட பொட்டை ஸ்டாலின் உடனே அழித்து நடந்து கொண்ட விதம் குறித்து கேள்வி கேட்கவில்லை என்று வினா எழுப்பினார். பின்னர் அவரே கூறியதாவது:
ஸ்ரீரங்கம் கோவிலில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நடந்து கொண்ட விதம் என்பது ஹிந்து மதத்தினை அவமானப்படுத்துவது போன்றது.அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதற்காக அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது. அத்துடன் அவர் அப்படி நடந்து கொண்ட பொழுது அங்கிருந்த கோவில் பட்டர்கள் அவரை கண்டித்து கேள்வி கேட்டிருக்க வேண்டும்.
அவரது இடத்தில் நான் இருந்தால் அப்படி நடந்து கொண்டிருக்க மாட்டேன். ஹிந்துமதம் என்றில்லை. இந்த மாதம், ஜாதி, மொழி எதுவும் தேவை இல்லை. இறைவன் என்றால் இறைவன்தான்.அது நம்பிக்கை
நியாயமாக ஸ்டாலினிடம் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஏன் என்றால் இங்கே ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் இடையே எழுதப்படாத ரகசிய கூட்டணி இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.