தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்

வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST

வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொள்ளாச்சியைச் சேர்ந்த சுப்பையா தாக்கல் செய்த பொதுநல மனுவில், உள்ளாட்சித் தேர்தலில் பஞ்சாயத்து தலைவர், வார்டு கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட 4 பதவிகளுக்கு நான் வாக்களிக்க வேண்டியுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்வது போல் அவர்களின் உடல்நலன் குறித்த மருத்துவப் பரிசோதனை அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். இதன் மூலம் உடல் ஆரோக்கியமான நிலையில் உள்ள மக்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய முடியும். இது இடைத் தேர்தல்களைத் தவிர்ப்பதுடன் மக்களின் வரிப்பணம் விரயமாவதையும் தடுக்க உதவும்.
எனவே, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உடல் தகுதி குறித்த மருத்துவப் பரிசோதனை அறிக்கையை வேட்புமனுவுடன் தாக்கல் செய்யவும், இதுகுறித்து தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். 
இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் தங்களது மருத்துவ அறிக்கையை சமர்ப்பிப்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்ததது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உடல்தகுதி குறித்த மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யக் கோரும் விதிகள் எதுவும் சட்டத்தில் இல்லை என பதில் அளிக்கப்பட்டிருந்தது.
மாற்றத்துக்கு நேரம் வந்துவிட்டது... இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், இது தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 10 நாள்கள் கால அவகாசம் வேண்டும் என்றார். 
அப்போது நீதிபதி கிருபாகரன், அலுவலக உதவியாளர் முதல் நீதிபதிகள் வரை பணியில் சேரும் போது தங்களின் உடல் தகுதி குறித்த மருத்துவ சான்றிதழைச் சமர்ப்பிக்கின்றனர். நாட்டின் சட்டத்தையே உருவாக்கும் மக்கள் பிரதிநிதிகள் மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் முறையை ஏன் கட்டாயமாக்கக் கூடாது? தமிழகத்தில் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தியா முழுவதும் 40 சதவீத எம்.பி.க்கள் வாரிசுகளாகத்தான் உள்ளனர். அமெரிக்காவில் இரண்டு முறைக்கு மேல் யாரும் தேர்தலில் போட்டியிட முடியாது. அதே போன்று இந்தியாவிலும் கட்டாய சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார்.
அப்போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் வேட்பாளர்கள் யார் என வாக்காளர்கள் பார்ப்பது கிடையாது. சின்னத்தைப் பார்த்துத்தான் வாக்களிக்கின்றனர் என்றார்.
ஒரு லட்சம் வாக்காளர்களின்...இதனையடுத்து நீதிபதி, சின்னங்களைப் பார்த்து வாக்களிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. நோயாளிகள் யாரையும் மக்கள் தேர்வு செய்ய மாட்டார்கள். கடந்த 1967-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்தான் ஆட்சியில் இருந்துள்ளனர். முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு மக்கள் அளித்த வரவேற்பு தற்போதுள்ள நடிகர்களுக்கு இல்லை. 
ரெளடிகளுக்கும், நில அபகரிப்பாளர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். ஒரு லட்சம் வாக்காளர்களின் கையெழுத்து இருந்தால் மட்டுமே அரசியல் கட்சியைப் பதிவு செய்ய வேண்டும். முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் கொண்டு வந்த தேர்தல் சீர்திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் தொடர வேண்டும் என கருத்துத் தெரிவித்த நீதிபதி, விசாரணையை வரும் ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.