

புதிய மருந்துகளைக் கண்டறியும் வகையில் மாணவர்களின் திறனை ஊக்குவிக்க வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக்குழு முன்னாள் துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் வலியுறுத்தினார்.
வண்டலூர் பி.எஸ்.அப்துர்ரகுமான் கிரசென்ட் நிகர்நிலைப் பல்கலைக் கழக உயிரி அறிவியல் மற்றும் மானுடவியல் துறை, இந்திய மருந்தியல் கல்வி, ஆராய்ச்சிக் கழகம் இணைந்து அண்மையில் நடத்திய தேசியக் கருத்தரங்க நிறைவு விழாவில் அவர் பேசியது:
அமெரிக்கா, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் மருந்து தயாரிப்புத் துறையில் உயிரி அறிவியல் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளர்ச்சியை எட்டிப் பிடித்துள்ளது. நோயாளியின் மரபணு ஆய்வு மூலம் நோய் தாக்கத்தின் அளவு குறித்து கண்டறியப்பட்டு, நோயாளிக்கு ஏற்ற சரியான வீரியமிக்க மருந்தை, சரியான அளவில் அளிக்கும் தொழில்நுட்பமாக வளர்ந்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்டுவரும் பெரும்பாலான மருந்துகள் வளர்ந்த நாடுகளின் தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் நிலையில் இருப்பதற்கு ஆய்வுத்திறன் குறைபாடு முக்கிய காரணமாக உள்ளது. மாணவர்களின் ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மருந்தியல் கல்வி ஆராய்ச்சிக் கழகம் மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் கிடைக்கும் மூலிகைகள், மூலப்பொருள்களைப் பயன்படுத்தி புதிய மருந்துகள் கண்டறியும் நடவடிக்கைகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும் என்றார் அவர்.
கருத்தரங்கில் தேர்வு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வுத்திறன் சுவரொட்டிகள் உருவாக்கிய மாணவர்கள், பேராசிரியர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்திய மருந்தியல் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் எஸ்.ஹெச்.அன்சாரி, இந்திய மருந்து தயாரிப்புத் தொழில் கூட்டமைப்புத் தலைவர் பி.கே.குப்தா, கருத்தரங்கத் தலைவர் எஸ்.ஹேமலதா, ஒருங்கிணைப்பாளர் உபேந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.