கிடப்பில் சிறப்பு பொருளாதார மண்டலத் திட்டம்

சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களை சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 
கிடப்பில் சிறப்பு பொருளாதார மண்டலத் திட்டம்
Updated on
2 min read

கடந்த 10 ஆண்டுகளாக சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களை சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

தொழில் வளர்ச்சி இல்லாத, வறட்சிப் பகுதியான பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி என்னும் முழக்கத்தோடு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டம் மத்திய, மாநில அரசுகளால் கடந்த 2007- இல் அறிவிக்கப்பட்டது. 

இத்திட்டத்துக்காக, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேப்பந்தட்டை வட்டம், எறையூர், லப்பைக்குடிகாடு, பென்னகோணம், திருமாந்துறை, பேரையூர் ஆகிய கிராமங்களுக்குள்பட்ட பகுதியில் ஒரு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 3 லட்சம் வரை பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு அளித்து, 3,100 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. 

நிலம் வழங்கும் விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், சிறப்புப் பொருளாதார மண்டலம் அருகே 3 ஆயிரம் ஏக்கரில் துணை நகரம் அமைத்து, அதில் விவசாயிகளுக்கு வீட்டுமனை வழங்கவும் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, விவசாயிகளே முன்வந்து பருத்தி, மக்காச்சோளம், கடலை, கம்பு, துவரை ஆகியவற்றை சாகுபடி செய்த நிலங்களை அளித்தனர். 

2007 -ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜி.வி.கே. கட்டுமான நிறுவனத்திடம் இத்திட்டத்தைத் தொடங்க ஒப்பந்தம் செய்தார். ஆனால், அதற்கான பூர்வாங்கப் பணிகள் எதுவும் தொடங்கவில்லை. பின்னர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இதுவரை சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டம் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. 

திட்டம் தொடங்கப்பட்டால் ரயில்வே இருப்புப் பாதை வரும், கடலூர் துறைமுகத்துடன் போக்குவரத்துத் தொடர்பு ஏற்படும், பல்லாயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை நம்பிய பெரம்பலூர் மாவட்ட மக்களும், நிலம் வழங்கிய விவசாயிகளும் திட்டம் தொடங்கப்படாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

இதனிடையே, சிறப்புப் பொருளாதார மண்டலம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட இடத்தில் விமான உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்படும் என ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அறிவித்தது. அதுவும் அறிவிப்பாகவே உள்ளது.

இதுகுறித்து நிலம் வழங்கிய விவசாயிகள் சிலர் கூறியது: 
அரசால் நியமிக்கப்பட்ட தனி அலுவலர் அறிவுறுத்தியதன் பேரில், எங்களது விவசாய நிலங்களை மிகவும் சொற்ப விலைக்கு விற்பனை செய்தோம். திட்டம் தொடங்கப்பட்டால் இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என நம்பி இருந்தோம். ஆனால், நிலங்களை கையகப்படுத்தி 10 ஆண்டுகளாகியும், இதுவரை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

இதனால், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களில் சீமைக்கருவேல மரங்களும், செடி கொடிகளும் வளர்ந்து முட்புதர்களாக காணப்படுகிறது. அறிவிக்கப்பட்ட திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது, அந்த நிலங்களை சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் வீ. ஞானசேகரன் கூறியது: 

விவசாயிகளிடம் ஆசை வார்த்தை கூறி ஜி.வி.கே. குழுமம் அரசு அதிகாரிகளின் உதவியுடன், அடிமாட்டு விலைக்கு விளை நிலங்களை வாங்கியது. நிலம் அளிக்கும் விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, வீட்டுமனை என்ற உத்தரவாதத்துடன் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் அனைத்தும் சீமைக்கருவேல முள்களால் புதர்மண்டி தரிசு நிலங்களாக காணப்படுகிறது. தங்களது வாழ்வாதாரமான நிலங்களை வழங்கிவிட்டு, தங்களது வாரிசுக்கு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. எனவே, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார் அவர். கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டத்தை தொடங்க வேண்டும். அல்லது, நிலம் வழங்கிய விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென திமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com