அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு புதிய மனு: தலைவர்கள் கண்டனம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்ய உள்ளதற்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் உள்ளிட்ட

News image
Updated On :29 மார்ச் 2018, 8:00 pm

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்ய உள்ளதற்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
துரைமுருகன்(திமுக): காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு முடியும் நாளில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசிப்பது வேதனையளிக்கிறது. அதிமுகவின் 50 எம்.பி.-க்கள் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அமர்ந்திருக்க வேண்டும். மத்திய அரசை எதிர்க்கும் தைரியம் தமிழக அரசுக்கு இல்லை. மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடுத்தால் அதை ஏற்று, கோடைக்கால விடுமுறை என்பதால் விசாரணை மூன்று மாதம் தள்ளி வைக்கப்படும். அதோடு எல்லாம் மாறிவிடும். திட்டம் என்றால் என்னவென்று மத்திய அரசு தற்போது கேட்கப் போவதாகக் கூறுகிறது. இதை முன்பே கேட்டிருக்கக் கூடாதா? மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து மக்களை ஏமாற்றுகின்றன.
சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்துக்கு துரோகம் செய்த மத்திய அரசைக் கண்டித்தும், மாநில அரசின் செயல்பாட்டை எதிர்த்தும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படும் வகையிலும் ஒருநாள் பொது வேலை நிறுத்தம் நடத்த வேண்டும். வேலைநிறுத்தத்தின் மூலம் தமிழகமே ஸ்தம்பித்தது என்கிற அசாதாரண நிலையின் மூலம் மத்திய அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரையும் திரட்டி வேலைநிறுத்தத்தை நடத்துவது மிகவும் அவசியம்.
தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக): காவிரியில் தமிழக உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தமிழக பாஜக முனைப்பாக இருக்கிறது. இது தொடர்பாக எங்களது கோரிக்கையை வலியுறுத்துவது மட்டுமல்லாமல் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தலைமையில் ஒரு குழு அமைத்து நமது உரிமையை வலிமையாக எடுத்துரைத்திருக்கிறோம்.
மத்திய அரசும் உச்சநீதிமன்றம் என்ன வலியுறுத்தியதோ அதை நிச்சயம் நிறைவேற்றும். நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவும் மத்திய அரசுக்கு கிடையாது. ஆனால், இது 120 ஆண்டுக்கால பிரச்னை ஆகும்.
விஜயகாந்த் (தேமுதிக): 6 வார காலத்துக்குள் வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தியது கண்டிக்கத்தக்கது. இது ஒட்டுமொத்தமாக தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும். மாநில அரசும் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், இரு அரசுகளையும் மக்கள் புறந்தள்ளுவது உறுதி.
ராமதாஸ் (பாமக) : காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் அளித்த கெடு முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டு புதிய மனு தாக்கல் செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆறு வாரங்கள் அமைதியாக இருந்துவிட்டு, தற்போது உச்ச நீதிமன்றத்தை அணுகுவது நம்பவைத்து கழுத்தை அறுக்கும் செயல். தமிழகத்தை மத்திய அரசு ஏமாற்றுகிறது என்பது நன்றாகத் தெரிந்தும் அதற்கு எதிராக செயல்பட தமிழக ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. 
பழ.நெடுமாறன் (தமிழர் தேசிய முன்னணி): காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தெளிவுபடுத்துமாறு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முறையிட்டுள்ளது காலம் கடத்தும் தந்திரமாகும். உச்ச நீதிமன்றமே நடுவர் மன்றத்தை அமைத்ததைப் போல இப்போதும் உச்ச நீதிமன்றமே நேரடியாக காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் முறைப்படுத்துதல் குழுவையும் அமைக்க முன் வர வேண்டும். 
ஜி.கே.வாசன் (தமாகா): நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு மதித்துச் செயல்படுத்தவில்லை. இது கண்டிக்கத்தக்கது. சட்டம் விவசாயிகள் பக்கம் இருந்தும் மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்க முன்வராதது ஜனநாயகத்தில் ஏற்புடையதல்ல.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): காவிரி விவகாரத்தில் மத்திய அரசோடு சேர்ந்து தமிழக அரசு நாடகமாடுகிறது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் இருந்து மத்திய அரசைக் காப்பாற்றுவதற்காகத்தான் தமிழக அரசு நாடகம் ஆடுகிறது என்பதை மக்கள் அறிவர்.
தொல்.திருமாவளவன் (விசிக): அதிமுக எம்.பி.-க்கள் ஒட்டுமொத்தமாக தங்கள் பதவியை ராஜிநாமா செய்வது மட்டுமே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உத்தரவாதமாக அமையும். இதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதோடு, மத்திய அரசின் கவனத்தையும் ஈர்க்க முடியும்.
தமிமுன் அன்சாரி (மஜக): மத்திய அரசு திட்டமிட்டே கால தாமதம் செய்து தமிழக மக்களை ஏமாற்றிவிட்டது. தமிழக அரசு இனியும் ஏமாறாமல் துரிதமாக, சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும். 
நிஜாமுதீன்(தேசிய லீக்): காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், நீதிமன்றம் உத்தரவிட்ட கால வரம்பை தாண்டி தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை மத்திய, கிகிமாநில அரசுகள் இழைத்துள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜிநாமா செய்ய வேண்டும். 
கி.வீரமணி (திராவிடர் கழகம்): காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் செயல் திட்டம் குறித்து இறுதித் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மீண்டும் மனு தாக்கல் செய்வது தேவையற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.