
திருச்செங்கோடு பெண் காவல் துணை கண்காணிப்பாளர் விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்துகொண்ட வழக்கை சிபிஐ கைவிடுவதாக தெரிவித்துள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரையில் வழக்கைக் கைவிடும் எண்ணம் இல்லை என்று அவரது தந்தை ரவி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் கடந்த 2015, ஜூன் 24 -ஆம் தேதி பள்ளிப்பாளையம் அருகே கிழக்குத் தொட்டிப்பாளையம் ரயில் பாதையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் விஷ்ணுப்பிரியா நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் 2015, செப்டம்பர் 18-ஆம் தேதி தனது முகாம் அலுவலக வீட்டில் தூக்கிட்டு விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். அதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் உயரதிகாரிகள் கொடுத்த நெருக்கடி காரணமாகவே தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரியும் அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
அதைத் தொடந்து 2016, ஜூலை 1-ஆம் தேதி, அந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகு விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை கோவையைச் சேர்ந்த சிபிஐ போலீஸார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் சிபிஐ போலீஸார் வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை கோவை முதன்மை குற்றவியல் நீதித் துறை நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்தனர். அதில், வழக்கில் மேல் நடவடிக்கை இன்றி கைவிடப்பட்ட வழக்கு என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக மே 9-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கலாம் என விஷ்ணுபிரியாவின் தந்தை ரவிக்கு உத்தரவுக் கடிதம் அனுப்பப்பட்டது. அதன்படி, அவர் கோவை முதன்மைக் குற்றவியல் நீதித் துறை நீதிமன்ற நீதிபதி மலர்மன்னன் முன்னிலையில் புதன்கிழமை ஆஜரானார். இந்த வழக்கு விசாரணையை நீதிபதி மே 24-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த ரவி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிபிஐ தாக்கல் செய்த அறிக்கை எங்களுக்குக் கிடைக்கவில்லை. அறிக்கை கிடைத்த பிறகே அதனை படித்துப் பார்த்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய முடியும். என் மகள் சாவுக்குக் காரணமானவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரையில் இந்த வழக்கைக் கைவிடும் எண்ணம் இல்லை. இறுதிவரை போராடுவேன் என்றார்.
அவரது வழக்குரைஞர் அனிதா ரவி கூறுகையில், ''சிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கையில் எங்களுக்கு ஆட்சேபணை உள்ளது. எங்களது ஆட்சேபணையை நீதிமன்றத்தில் தெரிவிப்போம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






