தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் குறித்து ரஜினிகாந்த் கூறியது சரியானதுதான் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்தார். அதேசமயம் ரஜினியின் இந்தக் கருத்துக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தாராபுரத்தில் பாஜக செயல் வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க பெட்ரோலியத் துறை அமைச்சர் முயற்சி செய்து வருகிறார். அதேநேரத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து முயற்சித்தால் இதன் விலை குறையும்.
தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து ரஜினிகாந்த் கூறியது சரியானதுதான். அவர் சொன்னதுபோல் திட்டமிட்டு வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளையும், அவர்களைத் தூண்டிவிட்ட தலைவர்களையும் அடையாளம் கண்டு அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
காயப்படுத்திவிட்டது: இதனிடையே, தூத்துக்குடி சம்பவம் தொடர்பான ரஜினி கருத்து குறித்து மதிமுக பொதுச் செயலர் வைகோ, மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
"எதற்கெடுத்தாலும் போராட்டம் எனச் சென்றால் தமிழ்நாடு சுடுகாடுபோல ஆகிவிடும்' என நடிகர் ரஜினிகாந்த் கூறியது, தமிழக மக்களின் நெஞ்சங்களை மிகவும் காயப்படுத்தி விட்டது.
சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் போன்ற திட்டங்களால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இவற்றை எதிர்த்து மக்களின் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மதிமுகவும் இத்திட்டங்களை எதிர்த்து இறுதிவரை போராடும் என்றார்.
பாதிக்கப்பட்டோரின் குரலாக இல்லை: இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் அளித்த பேட்டி:
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கிய நடிகர் ரஜினிகாந்தின் மனிதநேயம் பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு தமிழக அரசும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும், காவல் துறையும் காரணமில்லை என்ற வகையில், சமூக விரோதிகளின் ஊடுருவல் காரணமாகவே துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக அவர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.
சட்டப் பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்தக் கருத்தை கூறினாரோ அதை அப்படியே நடிகர் ரஜினிகாந்த் எதிரொலித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ரஜினியின் குரல் இல்லை என்பது வேதனை அளிக்கிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


