திருச்சியில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களிடம் ரூ.1 கோடி பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த 5 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த முருகேசன், திருச்சி எடமலைப்பட்டி புதூரில் தங்கியிருந்து பாலக்கரையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது நிறுவனத்தில் பணியாற்றும் ஒரத்தநாடு அருகே தலையாமங்கலத்தைச் சேர்ந்த க.சுந்தரேசன், மதியழகன் ஆகியோர் அக்.26-ஆம் தேதி சென்னை சென்று, அன்றிரவு முருகேசனுக்கு வேண்டிய நபர் கொடுத்த ரூ.1 கோடி ரொக்கத்தை தலா ரூ.50 லட்சமாக இரு பைகளில் வைத்து ஆம்னிப் பேருந்தில் கொண்டு வந்தனர்.
மறுநாள் (அக்.27) திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பாலக்கரை செல்ல முயன்ற போது, காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் இருவரையும் தாக்கி அவர்களிடமிருந்த பணத்தை பறித்துச் சென்றனர்.
இதுதொடர்பாக, திருச்சி கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இச்சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்நிலையில், திருச்சி ஜங்ஷன் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த சென்னை மண்ணடி டேவிட்சன் தெருவைச் சேர்ந்த அ.இஸ்மாயில்(27), பம்மல் முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஏ.ஜெ.முகமது ரபீக்(29) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் மேலும் சிலருடன் சேர்ந்து ரூ.1 கோடி ரொக்கத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பிராட்வே பிரகாசம் சாலையைச் சேர்ந்த பா.ஜாகிர் உசேன் (20), மண்ணடி ஐயர் சந்து பகுதியைச் சேர்ந்த மு.முகமது சமீர் (19), எருகஞ்சேரி சிவசங்கரன் தெருவைச் சேர்ந்த கா.சாகுல் அமீது(26) ஆகியோரைக் கைது செய்த போலீஸார், அவர்களிமிருந்து ரூ.4.72 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர். அவர்களைக் கைது செய்யும் பட்சத்தில்தான் அதிக அளவு தொகை மீட்க வாய்ப்புள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








