/

இடைத் தேர்தல்களை எதிர்கொள்ள  அதிமுக-திமுகவுக்கு அச்சம்:  டிடிவி தினகரன்

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தல்களை எதிர்கொள்ள அதிமுக, திமுக அஞ்சுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி

News image
Updated On :9 அக்டோபர் 2018, 1:41 am IST

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தல்களை எதிர்கொள்ள அதிமுக, திமுக அஞ்சுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி: திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் சைக்கிள் பேரணி, செயல் வீரர்கள் கூட்டம் அனைத்தும் நடத்தினர். அப்போதே வேறு ஏதோ செய்யப் போகிறார்கள் என நினைத்தேன். இப்போது தேர்தலை நிறுத்த தலைமைச் செயலாளரை வைத்து கடிதம் எழுதியுள்ளனர்.
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு கடந்த 2016 நவம்பர் இறுதியிலும், கடந்த ஆண்டு டிசம்பரில் ஆர்.கே.நகரிலும் இடைத் தேர்தல் நடந்தது. ஆர்.கே.நகர் தேர்தலின் போது, கன்னியாகுமரியில் ஒக்கி புயல் தாக்கியது. ஆனால், இப்போது மழையைக் காரணம் காட்டி தேர்தலை நிறுத்தியுள்ளனர்.
தேர்தல் ஆணையம் சுயாட்சி பெற்ற அமைப்பு என நினைத்தோம். மத்திய அரசு வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையைக் கூட நம்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரெட் அலர்ட் என்றார்கள். ஆனால், ஒரு சொட்டு மழை கூட சென்னையில் இல்லை. இதையெல்லாம் பார்க்கும் போது சட்டத்தின் ஆட்சியா நடைபெறுகிறதா அல்லது அதிபர் ஆட்சி நடக்கிறதா எனத் தெரியவில்லை.
தேர்தல் நடத்தாமல் இருப்பதற்காகக் கூறப்பட்ட காரணத்தை நினைத்து தமிழக மக்கள் சிரிக்கிறார்கள். இந்த விஷயத்தில் வானிலை ஆய்வு மையமும் அரசியல் செய்கிறோ என மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.
திமுக நிலைப்பாடு: திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் திமுக மனு போட்டு விட்டு, இப்போது அங்கு தேர்தல் நடத்த வேண்டுமென அந்தக் கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். அரசியல்வாதிகள் மீது நம்பிக்கையில்லாததற்கு இதுவே காரணம். இரு கட்சிகளும் தேர்தலுக்கே அஞ்சுகின்றன.
துணைவேந்தர் நியமனம்: ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அப்போது ஆளுநராக இருந்த வித்யா சாகர் ராவ், உயர் கல்வித் துறையில் நிறைய புகார்கள் வருகிறது. தேடுதல் குழுவை சரியாக அமைத்து துணைவேந்தர் நியமனத்தைச் சரியாக செய்யச் சொன்னார்.
முதல்வரிடம் சொல்லி உயர் கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவாலை நியமித்தோம். அமைச்சர்கள் கே.பி.அன்பழகனும் மற்றவர்களும் கோபித்துக் கொண்டனர். வணிகவரித் துறையிலும் அதிகாரிகளை மாற்றினோம். ஆனால், இப்போது ஆளுநர் குறை சொல்கிறார். அவர் அப்போதிருந்த ஆளுநரையும் குறை சொல்கிறாரா எனத் தெரியவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.