தமிழகத்தில் சிசுவதைகள் தொடரும் நிலையில், முடங்கி கிடக்கும் தொட்டில் குழந்தைகள் திட்டத்தை மீண்டும் சிறப்பாகச் செயல்படுத்த நடவடிக்கையெடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தின் சில பகுதிகளில் கொடுஞ்செயலாக நடைபெற் வந்த பெண் சிசுவதையைத் தடுக்கும் நோக்கத்துடன் 1992ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொட்டில் குழந்தை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மாநிலத்தில் முதல் முறையாக சேலம் மாவட்டத்தில்தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் தொட்டில் வைக்கப்பட்டது.
இதன்பிறகு மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி ஆகிய 4 மாவட்டங்களிலும், இதன்பிறகு இத் திட்டத்தின்படி, சமூகச் சூழ்நிலை காரணங்களினால் பெற்றோர்களால் நிராகரிக்கப்படும் பெண் குழந்தைகளைப் பாதுகாத்துப் பராமரிக்கும் வண்ணம் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், குழந்தைகள் இல்லம் மற்றும் காப்பகங்கள் ஆகிய இடங்களில் தொட்டில்கள் வைக்கப்பட்டன.
பாதிப்பு ஏற்படக் கூடிய மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பெண் சிசுக்களைப் பெற, அம் மையங்களின் வசதிகள் மேம்படுத்தப்படும். மாவட்ட சமூக நல அலுவலகங்களிலும், ஆரம்ப சுகாதார, துணை ஆரம்ப சுகாதார மையங்களிலும் மொத்தம் 188 இடங்களில் தொட்டில்கள் 2004ஆம் ஆண்டில் வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் 2001-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 942 பெண் குழந்தைகள் என்று இருந்த குழந்தை பாலின விகிதம், 2011-ம் ஆண்டில் 946 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தொட்டில் குழந்தை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 5 மாவட்டங்களில் குழந்தை பாலின விகிதம் அதிகரித்தது.
சேலம் மாவட்டத்தில் 2001ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி குழந்தை பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 851 ஆக இருந்தது. அது 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது 917 ஆக அதிகரித்தது. இதேபோல், மதுரை மாவட்டத்தில் 926இல் இருந்து 939 ஆகவும், தேனி மாவட்டத்தில் 891இல் இருந்து 937 ஆகவும், திண்டுக்கல் மாவட்டத்தில் 930இல் இருந்து 942 ஆகவும், தருமபுரி மாவட்டத்தில் 826இல் இருந்து 911 ஆகவும் அதிகரித்தது.
எனினும், 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் குழந்தை பாலின விகிதத்தில் பெண் குழந்தை விகிதம் குறைந்துள்ளது. இதற்கு காரணம், பெண் குழந்தைகளை கருவிலேயே அழிப்பது மற்றும் பெண் சிசுக் கொலை எனக் கருதப்பட்டது. இதனைத் தொடந்து இந்த மாவட்டங்களிலும் தொட்டில் குழந்தைகள் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
முடங்கும் நிலையில்...: இத் திட்டம், தற்போது முடங்கும் நிலையில் உள்ளது. தொட்டில் குழந்தை திட்டத்தில் நேரடியாக குழந்தைகளை ஒப்படைப்பது அரிதாகவே உள்ளது. சாலையோர முட்புதர், பேருந்து நிலையம், குப்பைத் தொட்டி, மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பல இடங்களில் வீசிச் செல்லப்படும் நிலை உள்ளது.
தொட்டில் குழந்தைகள் திட்டம் துவங்கியதில் இருந்து கடந்த ஆண்டு வரை 966 ஆண் குழந்தைகள், 4,038 பெண் குழந்தைகள் என மொத்தம் 5,024 பச்சிளம் குழந்தை பெறப்பட்டுள்ளன. இந்த குழந்தைகள் முறைப்படி தத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
கடந்த பல ஆண்டுகளாக இத் திட்டத்தின்கீழ் தொட்டில் குழந்தைகள் பெறப்படுவது இல்லை. முக்கிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த தொட்டில்களும் காணாமல் போய்விட்டன. இதைப் பராமரிக்க எந்தத் துறை அதிகாரிகளும் முன்வருவதில்லை.
பெண் குழந்தை பிறப்பு சதவீதத்தை ஆண் குழந்தைகளுக்கு இணையாக உயர்த்தும் திட்டம் வெற்றி பெறவில்லை. தற்போதைய நிலையில்கூட, மாநில அளவில், 1,000 ஆண் குழந்தைகளுக்கு 942 பெண் குழந்தைகள் என்ற நிலையே உள்ளது. குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், உதவித்தொகை திட்டம் என பல்வேறு திட்டங்கள் நடப்பில் இருந்தாலும், பெண் குழந்தை வேண்டாம் என வெறுத்து ஒதுக்கும் நிலையே நீடிக்கிறது.
தொட்டில் குழந்தைகள் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தினால்தான், பெண் குழந்தைகளின் பிறப்பு, ஆணுக்கு இணையான நிலையை எட்ட முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதுகுறித்து சமூக நலத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இத் திட்டம் கைவிடப்படவில்லை. தொடர்ந்து அமலில் உள்ளது, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் தொட்டில்கள் உள்ளன என்றனர்.
அரசு மருத்துவமனைகளின் நுழைவு வாயிலில் தொட்டில்:
இதுகுறித்து நாமக்கல்லைசச் சேர்ந்த சமூக ஆர்வலர் வழக்குரைஞர் குப்புசாமி தெரிவித்தது: சிசுக்கள் வீசியெறிப்படுவது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் அரசு மருத்துவமனைகள்,ஆரம்ப சுகாதார நிலையங்களின் நுழைவு வாயிலிலேயே, பாதுகாப்பு வசதியுடன் தொட்டில்களை வைக்க வேண்டும். சிசுக் கொலைகள் முற்றிலுமாக இல்லை என்ற நிலை உருவாகும் வரை, இந்தத் திட்டம் தொய்வின்றி தொடர அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும். ஆர்வமுள்ள தன்னார்வ அமைப்புகளையும் இந்த திட்டத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
இன்றைய ராசி பலன் (31.05.2026) - விருச்சிகம்

இன்றைய ராசி பலன்கள் (மே 31 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு அமைதி!

தைரியம் கூடும் மகர ராசிக்கு: இன்றைய ராசி பலன்கள் (மே 31)
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



