கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தீவனம்!

அதிக பால்தரும் கறவை மாடுகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தீவனப்பயிராக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள
கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தீவனம்!
Updated on
1 min read



மேலூர்: அதிக பால்தரும் கறவை மாடுகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தீவனப்பயிராக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கோ 9 தட்டப்பயறு தற்போது விவசாயிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதிக பால்கறக்கவேண்டி கறவைமாடு வளர்ப்போர்கள் தீவனங்களுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளது. அதிக ஊட்டம் நிறைந்த கோ 9 தட்டப்பயறில் குறுகிய காலத்தில் அதிகமான தீவனமும் கிடைக்கும். கோ 9 தட்டப்பயறு தீவனத்துக்காகப் பயிரிடும்போது 50 முதல் 55 நாள்களில் செடி பூத்துக்குலுங்கும் நிலையில் கறவை மாடுகளுக்கும் பிற கால்நடைகளுக்கும் தீவனமாகக் கொடுக்கலாம் என்கிறனர் மதுரை வேளாண் அறிவியல் மையத்தினர்.
ஒரு ஏக்கர் நிலத்தில் தீவனப் பயிராக அறுவடை செய்தால் 9 டன் பசுந்தீவனம் கிடைக்கும். விதையாக எடுக்கநினைத்தால் செடியை நன்குவளர்த்து 90 முதல் 95 நாள்களில் தட்டைப்பயறு 300 கிலோ மகசூல் கிடைக்கும். இதை செடியாக அறுவடைசெய்து கால்நடைகளுக்குக் கொடுத்தால் 9 டன்னும், உலர் தீவனமாக தயார் செய்தால் 1.5 டன்னும் தீவனம் கிடைக்கும். 
இந்த ரகத் தட்டைப்பயறில் புரதச்சத்து 21.56 சதம் உள்ளது. குறைந்தபட்ச நார்ச்சத்தைக் கொண்டுள்ளதால் இதன் தழைகள் அதிக சுவையுள்ளதாகவும் செரிமாணத் தன்மையுள்ளதாகவும் இருக்கிறது. பொதுவாக தட்டைப்பயறில், பூஞ்சாளம், அசுவினி பூச்சி, மஞ்சள் தேமல் நோய் பாதிப்புகள் சூழ்நிலைக்கேற்ப காணப்படும். ஆனால், இந்த ரகம் மஞ்சள் தேமல் நோய் எதிர்ப்புத் திறன்கொண்டது.
பயிர் பாதுகாப்பைப் பொருத்தவரை தீவனப்பயிராக பயிரிட்டால் பயிர் பாதுகாப்புத் தேவையில்லை.
விதை உற்பத்திக்காகப் பயிரிடும்போது சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீரில் 2.5 மில்லி டைமெத்தோயேட் (ரோகார்) மருந்தைக் கலந்து தெளிக்கவேண்டும்.
பயிரிடும்முறை: நிலத்தை 2 அல்லது மூன்று முறை நன்கு புழுதியாக உழவேண்டும். ஏக்கருக்கு 5 டன் தொழு உரமிட வேண்டும். விதைக்கும்போது ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 100 கிலோ சூப்பர்பாஸ்பேட்டையும், 14 கிலோ பொட்டாஷ் உரத்தையும் கலந்து நிலத்தில் இடவேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்க 5 கிலோ விதையுடன் ரைசோபியம் உயிர்உரம் 200 கிராம் அரிசிக் கஞ்சியில் கலந்து விதை நேர்த்திசெய்து விதைக்க வேண்டும். 
தீவனப் பயிராக விதைக்கும்போது 30-க்கு 15 சென்டி மீட்டர் இடைவெளியிலும, விதைக்காகப் பயிரிடும்போது 60-க்கு 15 சென்டி மீட்டர் இடைவெளியிலும் விதையை விதைக்கவேண்டும். பத்துநாள்களுக்கு ஒருமுறை தேவையைப் பொறுத்து நீர்பாய்ச்சினால் போதுமானது. விதைத்து 15 முதல் 20 நாள்களில் களையெடுக்கவேண்டும். 
கோ 9 தட்டைப்பயறு மானாவாரியாக பயிரிடுவதற்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் ஏற்ற காலம். இறவைப் பயிராகப் பயிரிட ஜூன், ஜூலை அல்லது பிப்ரவரி, மார்ச் மாதங்கள் ஏற்ற காலமாகும். 
இத்தகவலை மதுரை வேளாண் மைய பூச்சியியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கு.செல்வராணி, பா.உஷாராணி, கி.ஆனந்தி, செல்விரமேஷ் ஆகியோர் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com