மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ராகிங்: மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 19 பேர் இடைநீக்கம்

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை ராகிங் செய்த புகாரில், இரண்டாமாண்டு மாணவர்கள் 19 பேர், கல்லூரியில் இருந்து 6 மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

Updated On :3 செப்டம்பர் 2018, 7:10 pm


மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை ராகிங் செய்த புகாரில், இரண்டாமாண்டு மாணவர்கள் 19 பேர், கல்லூரியில் இருந்து 6 மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் விடுதியில் கடந்த 31-ஆம் தேதி, சுவர் ஏறிக்குதித்து அத்துமீறி நுழைந்த இரண்டாமாண்டு மாணவர்கள் அங்கு ராகிங்கில் ஈடுபட்டனர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி, ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்லூரி முதல்வர் டி.மருதுபாண்டியன் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: 
இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவின்பேரில், கல்லூரியில் உள்ள ராகிங் தடுப்புக்குழு மாணவர்களிடம் விசாரணை நடத்தியது. இதில், முதலாமாண்டு மாணவர்கள் 15 பேர், தாங்கள் ராகிங் செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டதாகப் புகார் தெரிவித்தனர்.
அதையடுத்து கல்லூரி விடுதியில் உள்ள விடியோ பதிவுகளை ஆய்வு செய்து, விடுதிக்குள் புகுந்த இரண்டாமாண்டு மாணவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களை இடைநீக்கம் செய்ய ராகிங் தடுப்புக்குழு பரிந்துரைத்தது. அதன்பேரில் மருத்துவக்கல்லூரி நிர்வாகக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ராகிங் தடுப்புக் குழுவினரின் பரிந்துரை குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், 19 மாணவர்களை கல்லூரியில் இருந்து 6 மாதங்களும், விடுதியில் இருந்து ஓர் ஆண்டும் இடைநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள 19 பேரும் மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்களது நண்பர்கள் அறையில் தங்குவதோ, விடுதியில் சாப்பிடுவதோ கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களின் இடைநீக்கம் தொடர்பான அறிக்கை புதுதில்லியில் உள்ள தலைமை ராகிங் தடுப்புக் குழு, மருத்துவக் கல்வி இயக்ககம் மற்றும் மாணவர்களின் பெற்றோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ராகிங்கில் உடல் ரீதியாக காயப்படுத்தியதாகப் புகார் வரவில்லை. மனம் நோகும்படியான வார்த்தைகளாலும், செயல்களாலும் ராகிங் செய்துள்ளதாகவே புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடராத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுதியில் ஏற்கனவே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இனி கூடுதலாக மூன்று கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. தற்போது நடவடிக்கைக்கு ஆளான மாணவர்கள் தமிழகம், கேரளம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
ஆகஸ்ட் 31-ஆம் தேதி தேர்வு முடிந்த நிலையில் இரண்டாமாண்டு மாணவர்கள் அனைவரும் 45 நாள்கள் விடுப்பில் சென்றுவிட்டதால் இடைநீக்கம் குறித்த தகவல்கள் மாணவர்களின் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட உள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.