
சென்னையில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வார காலத்துக்குள் அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் உள்ளிட்ட 10 பேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 60 ஆண்டுகளாக அயனாவரத்தில் உள்ள குளத்தில் வீடுகள் கட்டி வசித்து வருகிறோம். இங்கு வசித்து வரும் எங்களுக்கு மின் இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை என அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் கடந்த 2008-ஆம் ஆண்டு நிலமற்ற ஏழைகளுக்காக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த திட்டத்தின் கீழ் எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி விண்ணப்பித்தோம். ஆனால் அதிகாரிகள் பட்டா வழங்க மறுக்கின்றனர். எனவே, அந்தத் திட்டத்தின் கீழ் எங்களுக்கு பட்டா வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்.
பட்டா வழங்க முடியாது: இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அந்த பகுதியில் குடியிருப்பவர்கள் வசித்து வரும் இடம் அரசுக்குச் சொந்தமான குளம். எனவே அவர்களுக்கு பட்டா வழங்க முடியாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், குளத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது. மேலும், அரசுக்குச் சொந்தமான நிலத்தையும், நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும்.
கடும் கண்டனத்துக்குரியது: தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால், அங்கு செல்லும் அதிகாரிகள் ஒரு சில பகுதிகளை மட்டும் அகற்றுகின்றனர். இவர்களால் உத்தரவுகளை சரிவர அமல்படுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக அந்த இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகி விடுகின்றன. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மனிதத் தவறுகளே காரணம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனப் போக்குடன் நடந்து கொள்ளும் அரசு நிர்வாகம், சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்குரியது.
நிவாரண நிதி: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து ஆக்கிரமிப்பாளர்களை அகற்றினால் மட்டுமே போதாது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற ஆக்கிரமிப்புகளைத் தடுக்க முடியும். எனவே, இனிவரும் காலங்களில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்க முடியாது என்ற நிலைப்பாட்டை அரசு நிர்வாகம் எடுக்க வேண்டும். இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
8 வார காலத்துக்குள்...: நீர் நீலை ஆக்கிரமிப்புகள் தொடர்பாக 2 வார காலத்துக்குள் ஆய்வுக் கூட்டம் நடத்தி, சென்னையின் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வார காலத்துக்குள் அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது சென்னை மாவட்ட ஆட்சியர், சென்னை மாநகராட்சி ஆணையர் குற்றவியல் மற்றும் துறை ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை மாநகர காவல் ஆணையர் வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இந்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை 12 வார காலத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






