ஊழல்வாதிகளை தண்டிக்கும் அதிகாரம் பெற்றதா நமது லோக் ஆயுக்த? பகீர் உண்மை

ஊழல்களை தடுக்கும் லோக் ஆயுக்த சட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டாலும், அது ஊழல்களை தடுக்கும் அளவுக்கு அதிகாரம் படைக்கவில்லை என்ற விமரிசனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. 
ஊழல்வாதிகளை தண்டிக்கும் அதிகாரம் பெற்றதா நமது லோக் ஆயுக்த? பகீர் உண்மை
Updated on
3 min read

ஊழல்களை தடுக்கும் லோக் ஆயுக்த சட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டாலும், அது ஊழல்களை தடுக்கும் அளவுக்கு அதிகாரம் படைக்கவில்லை என்ற விமரிசனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. 

அனைத்து மாநிலங்களிலும் அரசுத் துறைகளில் நடைபெறும் ஊழல்களை சுதந்திரமாகக் கண்டறிந்து விசாரிக்க, கடந்த 2013-ம் ஆண்டு, ‘லோக் ஆயுக்தா’ மற்றும் ‘லோக்பால்’ சட்டம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு எதிராக எந்த ஒரு தனி மனிதனும் வெளிப்படையாக வழக்குத் தொடர முடியும் என்று கூறப்பட்டது.

ஒரு வழக்கின் மீதான விசாரணையில், அரசியல்வாதிகளோ அல்லது அரசு அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்குப் பதவி பறிப்பு, சம்பள நிறுத்தம் மற்றும் பணிநீக்கம் போன்ற தண்டனைகள் வழங்கப்படும். 

இந்த சட்டத்தை முதலில் மகாராஷ்டிர மாநிலம் அமல்படுத்தியது. ஆனால் தமிழகம், புதுவை, தெலங்கானா உட்பட 12 மாநிலங்கள் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், நடைமுறைப்படுத்தாத மாநிலங்களிடம் இருந்து விளக்கம் கேட்டிருந்தது. 

தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்ட விளக்கம் திருப்தியளிக்காத காரணத்தால், தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா தொடங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. அத்துடன் லோக் ஆயுக்தா அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் ஜூலை 10-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து, தாமதப்படுத்தி வந்த லோக் ஆயுக்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் விதித்த கெடு முடிவதற்கு ஒரு நாள் முன்பாக தமிழக அரசு நிறைவேற்றியது.   

ஒருவேளை இந்த லோக் ஆயுக்த சட்டம் தாமதமாக நிறைவேற்றப்பட்டிருந்தாலும் அது தனது முழு அதிகாரத்தைக் கொண்டிருக்கிறதா? இந்த சட்டம் தமிழகத்தில் எந்தவிதமான மாற்றங்களை நிகழ்த்தும்? மாற்றங்களை நிகழ்த்தும் அளவுக்கு தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட லோக் ஆயுக்த சட்டம் வலிமையான அதிகாரம் படைத்த சட்டமா?

இதற்கு உதாரணமாக தமிழகத்தில் தற்போது நிலுவையில் உள்ள 2 முக்கிய வழக்குகளை ஆராய்வோம். 

தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில், ஆளும் கட்சியான அதிமுக மீது தொடர்ந்து ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் எழுந்துள்ளது. 

சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் - குட்கா ஊழல் புகார்
முதல்வர் பழனிசாமி - ஒப்பந்த ஊழல் வழக்கு

முதல்வர் மீது ஊழல் தடுப்புப் பிரிவுக்கு புகார் அனுப்பி நடவடிக்கை எடுக்காததால், உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி தொடுத்த மனு:

"கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக எடப்பாடி கே.பழனிசாமி பதவி வகித்தபோது, நெடுஞ்சாலைத் துறை திட்டங்களை தனது நெருங்கிய உறவினா்களான பி.சுப்பிரமணியம், சந்திரகாந்த் ராமலிங்கம், எஸ்.பி.கே. நாகராஜன், செய்யாத்துரை மற்றும் சேகா் ரெட்டி ஆகியோருக்கு வழங்கி ஆதாயம் அடையும் வகையில் செயல்பட்டுள்ளாா். கடந்த 7 ஆண்டுகளாக அவரின் நெருங்கிய உறவினா்களான ராமலிங்கம் உள்ளிட்டோருக்கு ரூ.4 ஆயிரத்து 833 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஊழலில் தொடா்புடையவா்கள் மற்றும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த மே மாதம் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு புகாா் அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது புகாரின் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்."

இதை உயர் நீதிமன்றம் கடந்த 7-ஆம் தேதி விசாரிக்கையில், தமிழக அரசு தரப்பில் முதல்வருக்கு எதிராக திமுக அளித்துள்ள புகாா் மீது முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி விசாரணை தொடா்பான வரைவு அறிக்கை ஊழல் தடுப்பு ஆணையரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பபட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதால் அடுத்த கட்ட விசாரணை 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

ஒருவேளை தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட லோக் ஆயுக்த சட்டம் இதுபோன்ற வழக்கை எதிர்கொண்டால், அந்த விவகாரத்தில் எந்தவித மாற்றத்தையும் அது உண்டாக்காது. காரணம் ஒப்பந்தப் பணிகள், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பணி மாற்றங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை விசாரிக்க தமிழக அரசால் வெளியிடப்பட்ட லோக் ஆயுக்தாவுக்கு அதிகாரம் கிடையாது.

ஆனால், தமிழகத்தில் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் எழுவது ஒப்பந்தப் பணிகளில் தான். அப்படி இருக்கையில், அந்த நடவடிக்கைகளில் விசாரணை மேற்கொள்ளவே தமிழகத்தால் நிறைவேற்றப்பட்ட லோக் ஆயுக்தவுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.    

குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் துறை டிஜிபி ராஜேந்திரன், காவல் துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, பிரபல குட்கா நிறுவனம் மற்றும் குடோன்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். 

இந்த சோதனை தொடர்பாக வருமான வரித் துறை தலைவர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். இந்தக் கடிதத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வருமான வரித் துறை சார்பாக தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

இதே ஊழல் குற்றச்சாட்டில் டிஜிபி ராஜேந்திரனின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. அதேசமயம் அவருடைய பதவியும் தமிழக அரசால் நீட்டிக்கப்பட்டது. 

ஒருவேளை தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்த சட்டத்தின் கீழ், இதுபோன்ற வழக்குகள் கொண்டு வரப்பட்டால் இதிலும் குற்றவாளிகளை தண்டிக்கும் அளவுக்கு லோக் ஆயுக்த சட்டம் வலிமையற்றதாகவே இருக்கும். 

முதலில் பணி நியமனங்கள் நடவடிக்கைகளில் லோக் ஆயுக்த அமைப்புக்கு விசாரணை மேற்கொள்ள அதிகாரம் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்த சட்டத்தில் விசாரணை இயக்குநர் என்ற ஒரு பிரிவு மட்டுமே இருக்கிறது. அதன்மூலம், விசாரணையின் முடிவில் விசாரணை அறிக்கையை மட்டுமே முதல்வரிடம் சமர்பிக்க முடியும். இதுதொடர்பாக, எந்த வித நடவடிக்கையும் லோக் ஆயுக்த அமைப்பால் மேற்கொள்ள முடியாது. அப்படி இருக்கையில், லோக் ஆயுக்த சட்டத்துக்கு இந்த இடத்தில் என்ன அதிகாரம் இருக்கிறது. 

அதேசமயம், பிற மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்தா சட்டத்தில், விசாரணை மேற்கொள்ள ஒரு தனி இயக்குநரும், வழக்குகளை தொடர ஒரு தனி இயக்குநரும் அந்த அமைப்பில் இடம்பெற்றிருப்பர். அதனால், ஒரு புகார் மீதான விசாரணை முடிந்த பிறகு, அவசியப்பட்டால், லோக் ஆயுக்தா வழக்கு தொடர்ந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரக் கூடிய அளவுக்கு அதிகாரம் படைத்திருக்கிறது. 

இதுதான், தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்த சட்டம்  எந்த அளவுக்கு அதிகாரத்துடன், வலிமையுடன் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதற்கான சில உதாரணங்கள்.
   
பெரிதளவிலான ஊழல் நடவடிக்கைகளை தடுக்க முடியாமல் போனால் வலிமையற்ற லோக் ஆயுக்த சட்டத்தின் பயன் என்ன என்று எதிர்க்கட்சிகள் தொடக்கத்தில் விமரிசித்தனர். 

அதை தற்போதைய ஊழல் வழக்குகளோடு ஒப்பிட்டுப் பார்த்த போது அவர்களது விமரிசனத்தில் மிகப்பெரிய உண்மை இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com