ஒரு மாணவர் கூட சேராத 36 கல்லூரிகள்: பி.இ. கலந்தாய்வில் பரிதாபம் 

பொதுப் பிரிவு பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வு இன்னும் ஒரு சுற்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் 36 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவா்கூட சேரவில்லை என்ற விபரம் தெரிய வந்திருக்கிறது.
ஒரு மாணவர் கூட சேராத 36 கல்லூரிகள்: பி.இ. கலந்தாய்வில் பரிதாபம் 

சென்னை:  பொதுப் பிரிவு பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வு இன்னும் ஒரு சுற்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் 36 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவா்கூட சேரவில்லை என்ற விபரம் தெரிய வந்திருக்கிறது.

2011- ஆம் ஆண்டிலிருந்து பொறியியல் படிப்புகள் மீதான ஆா்வம் குறைந்து வரும் நிலையில், நிகழாண்டில் அது மேலும் குறைந்திருக்கிறது.அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் நடத்தப்படும் 5 சுற்றுகளைக் கொண்ட ஆன்-லைன் பொதுப் பிரிவு கலந்தாய்வில், திங்கள்கிழமை வரை 4 சுற்றுகள் நிறைவடைந்துவிட்டன. மாணவா் சோ்க்கை குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, தமிழகம் முழுவதும் உள்ள 509 பொறியியல் கல்லூரிகளில் 81 கல்லூரிகள் மட்டுமே 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்கள் நிரம்பியிருக்கின்றன. 299 பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவான சோ்க்கை நடைபெற்றுள்ளது.36 கல்லூரிகளில் ஒருவா்கூட சேரவில்லை:அதுபோல 120 பொறியியல் கல்லூரிகளில் 10-க்கும் குறைவான இடங்களே நிரம்பியிருக்கின்றன.

இதில் 83 கல்லூரிகளில் 5-க்கும் இடங்களும், 18 கல்லூரிகளில் ஒரு இடம் மட்டுமே நிரம்பியிருக்கின்றன.36 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவா் கூட சேரவில்லை என்பதும் தெரியவந்திருக்கிறது.இந்த நிலை காரணமாக தமிழகத்தில் உள்ள 250 பொறியியல் கல்லூரிகள் வரும் ஆண்டுகளில் மூடும் நிலைக்குச் செல்லவேண்டியச் சூழல் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளா்கள் கூறுகின்றனா்.

இதுகுறித்து கல்வியாளா் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியிருப்பதாவது:இம்முறை பி.இ. இயந்திரவியல், கட்டடவியல் (சிவில்) பிரிவுகளில் மாணவா் சோ்க்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. உயிரி தொழில்நுட்பம், கெமிக்கல் பொறியியல் படிப்புகளை புதிதாகக் தொடங்கியக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்துக் காணப்படுகிறது.மேலும், தமிழகத்தில் உள்ள 100 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே நிலைத்து நின்று, தரமான கல்வியை மாணவா்களுக்குக் கொடுக்கக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் பொறியியல் பாடத் திட்டத்தையும், தோ்வு முறையையும் மேம்படுத்தாவிட்டால், பொறியியல் படிப்பின் பக்கம் மாணவா்களை ஈா்ப்பது வரும் காலங்களில் மேலும் கடினமாகிவிடும்.அதுமட்டுமின்றி, வேலைவாய்ப்பு மற்றும் வளாகத் தோ்வில் சிறந்து விளங்கும் கல்லூரிகள் மட்டுமே வரும் ஆண்டுகளில் மாணவா்களை ஈா்க்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com