மேக்கேதாட்டு அணை விவகாரம்: முதல்வர் பழனிசாமிக்கு கர்நாடக அமைச்சர் சிவக்குமார் கடிதம்  

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கர்நாடக நீர்பாசனத் துறை அமைச்சர் சிவக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.  
மேக்கேதாட்டு அணை விவகாரம்: முதல்வர் பழனிசாமிக்கு கர்நாடக அமைச்சர் சிவக்குமார் கடிதம்  

சென்னை: மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கர்நாடக நீர்பாசனத் துறை அமைச்சர் சிவக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.  

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் 67.16 டிஎம்சி நீரைத் தேக்கி வைக்கும் வகையில் ரூ.5,912 கோடி மதிப்பீட்டில்அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பான முன்சாத்தியக் கூறு அறிக்கையை கர்நாடக அரசு அண்மையில் அனுப்பியிருந்தது. இதனடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு சில கட்டுப்பாடுகளுடன் மத்திய நீர் ஆணையம் அண்மையில் அனுமதி அளித்தது.

இதனை எதிர்த்து தமிழக அரசின் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய நீர் ஆணையத்தின் திட்ட மதிப்பீடு ஆணையத்தின் (தெற்கு) இயக்குநர் என். முகர்ஜி, மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசைன், கர்நாடக அரசின் காவிரி நீர்வாரி நிகமின் நிர்வாக இயக்குநர் மல்லிகார்ஜுனா பி. குங்கே, கர்நாடக அரசின் நீர்வளத் துறையின் முதன்மைச் செயலர் ராகேஷ் சிங், கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் சிவக்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசின் மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

உச்சநீதிமன்றம் கடந்த 2018, பிப்ரவரி 16-ஆம் தேதி அளித்த இறுதித் தீர்ப்பில், காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007, பிப்ரவரி 5-ஆம் தேதி எடுத்த முடிவை உறுதி செய்துள்ளது. இந்த இறுதித் தீர்ப்பை வேண்டுமென்றே எதிர்மனுதாரர்கள் அவமதித்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும். நீதிமன்ற அவமதிப்புக்காக தண்டிக்க வேண்டும். மேக்கேதாட்டு அணை, குடிநீர் திட்டம் ஆகியவை தொடர்பாக விரிவான ஆய்வு அறிக்கை தயார் செய்வதற்கு கர்நாடக அரசின் காவிரி நீர்வாரி நிகத்துக்கு மத்திய நீர் ஆணையம் கடந்த 22-ஆம் தேதி அளித்துள்ள அனுமதிக்குத் தடை விதிக்க வேண்டும். மேற்கண்ட அனுமதி தொடர்பாக 22-ஆம் தேதியிட்ட கடிதத்தை திரும்பப் பெற மத்திய நீர் ஆணையம் திட்ட மதிப்பீட்டு இயக்கத்தின் (தெற்கு) இயக்குநர் என். முகர்ஜிக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கர்நாடக நீர்பாசனத் துறை அமைச்சர் சிவக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.  

அவர் தனது கடிதத்தில் மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதன் மூலமாக மேட்டூருக்கு உபரிநீர் திறக்கப்படுவது குறையும். இந்த விவகாரத்தை தமிழகத்துடன் நட்புரீதியில் பேசித் தீர்வு காணவே கர்நாடகம் விரும்புகிறது. எனவே இதுகுறித்து பேச நேரம் ஒதுக்க வேண்டும். 

இவ்வாறு அந்த அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.      

முன்னதாக மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுடன் பேசுவதற்கு எதுவும் இல்லை என்று, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்களது.  

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் வியாழன் மாலை நடைபெறவுள்ள நிலையில் இந்த கடிதம் எழுதப்பட்டு இருப்பது கவனத்திற்குரியதாக இருக்கிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com