உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பெண்ணைத் தொடர்புபடுத்தி அபாண்ட பழி சுமத்துவதா?: கி.வீரமணி கண்டணம் 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பெண்ணைத் தொடர்புபடுத்தி அபாண்ட பழி சுமத்துவதா? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டணம் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பெண்ணைத் தொடர்புபடுத்தி அபாண்ட பழி சுமத்துவதா?: கி.வீரமணி கண்டணம் 
Published on
Updated on
2 min read

சென்னை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பெண்ணைத் தொடர்புபடுத்தி அபாண்ட பழி சுமத்துவதா? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டணம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திராவிடர்  கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை பின் வருமாறு:

நாட்டையே மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கக் கூடிய ஒரு செய்தி, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஜஸ்டீஸ் ரஞ்சன் கோகாய் அவர்கள்மீது, முன்பு உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய ஒரு பெண், பாலியல் சீண்டல் குற்றம் சுமத்தியுள்ளார்!

இவர் கூற்றுப்படி அச்சம்பவம் கடந்த 2018 இல் நடந்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.இதுபற்றி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்கள், இது தம்மீது சுமத்தப்பட்டுள்ள பொய்க் குற்றச்சாற்று.திட்டமிட்டே இப்பழி தம்மீது சுமத்தப்பட்டுள்ளது; 20 ஆண்டுகளுக்குமேல் நீதித் துறையில் பணியாற்றி வரும் தம்மீது எந்தக் குற்றமும் யாரும் சுமத்தியதில்லை. இதன் பின்னணியில் ஒரு பெரிய சக்தி வேலை செய்துள்ளது. எனது சக நீதிபதிகள் விசாரித்துத் தீர்ப்பளிக்கட்டும்; என்னைப் பணத்தால் விலைக்கு வாங்க முடியாத நிலை என்பதால் இப்படிப்பட்ட இழிவான, பொறுப்பற்று, சிறுமைக் குற்றச்சாற்று வைக்கப்பட்டுள்ளது; எனது பணியைத் தடுக்கவே இம்மாதிரி ஒரு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்று உணர்ச்சி வசப்பட்ட நிலையில், துயரம் அவர் தம் நெஞ்சை அடைக்கும் நிலையில் கூறியுள்ளதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

இதில் ஒரு பெரிய சதியே உள்ளது என்ற அவரது கூற்றை நாடும், நடுநிலையாளர்களும் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. மோடி தலைமையில் உள்ள இந்த 5 ஆண்டுகால ஆட்சியில் தாக்குதலுக்கு ஆளாகாத பொது நிறுவனங்களே இல்லை - அமைப்புகளும், அதன் தலைவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு, விரட்டப்படுவது உலகறிந்த உண்மை. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியாக மனிதனையே கடித்த கதையாகிவிட்டது.

கல்வி அமைப்புகளும், ஏன் பிரதமர் அலுவலக அதிகாரிகளும்கூட பலர் வெளியேறத் துடித்துக் கொண்டுள்ளனர் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இச்செய்திகள் உண்மையாக இருப்பின், அதைவிட ஜனநாயகத்தை, அரசியல் சட்டத்தைக் கேலிக் கூத்தாக்கிடுவது வேறு எதுவும் இருக்க முடியாது.

‘‘எல்லாம் வெளிப்படைத் தன்மை உள்ளதாக எனது அரசில் இருக்கும்; ‘குறைந்த அரசு, நிறைந்த ஆளுமை’’ - என்பது எனது அணுகுமுறை என்றெல்லாம் பிரதமர் மோடி 2014 இல் வெற்றி பெற்ற போது கூறிய கருத்துக்கு - வாக்குறுதிக்கு - நேர்மாறான நிகழ்வுகள்தான் நாளும் நடைபெறுகின்றன!

உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்தது (12.1.2018) மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. அதில் தற்போதுள்ள தலைமை நீதிபதியும் ஒருவர்.

மிக முக்கியத்துவம் வாய்ந்த, நாடே எதிர்பார்க்கும் முக்கிய அரசியல் வழக்குகள் விசாரணையிலிருப்பதால் அதைத் தடுத்து அச்சுறுத்தும் வித்தைகளா, சித்து வேலைகளா என்று மக்கள் சிந்திக்கமாட்டார்களா?

‘விநாச காலே விபரீத புத்தி’ என்ற வடமொழி பழமொழி அறியாத ஒன்று அல்ல.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கே இந்த நிலை என்றால், மற்ற சாதாரண குடிமக்களின் நிலை என்ன என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்! இவ்வளவுக் கீழிறக்க நிலைக்கா செல்லவேண்டும்? உண்மை ஒரு நாள் வெளிவரும்! குற்றங்கள் நடந்த பல மாதங்களுக்குப் பிறகா பாதிக்கப்பட்டவர் கூறுவர்? என்ற சந்தேகம் இயல்பானதல்லவா?

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com