அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணையை மத்திய அரசு முடக்கி வைத்தது. ஊழல் டிஜிபி ஒருவர் பதவியில் நீடிக்க மத்திய அரசு நேரடியாக உதவிசெய்து ஒத்துழைக்கிறது. ஆர்.கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் என்ற வகையில், 84 கோடி ரூபாய் பணம் கொடுத்த வழக்கினை, யாருக்குமே தெரியாமல் ரகசியமாக “க்ளோஸ்” பண்ண வைத்து, அதைக் கண்டும் காணாமல் தேர்தல் ஆணையமும் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தது. ஊழலை ஒழித்துக் கட்டுவோம் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் வீராவேசமாகப் பேசிக்கொண்டே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரை டஜன் அமைச்சர்களை, ஊழல் விசாரணையிலிருந்து பா.ஜ.க அரசு தப்பிக்க வைத்தது. அரசுக்கு எதிராகவே வாக்களித்த திரு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை, தகுதி நீக்கம் செய்யாத அ.தி.மு.க அரசை இருகரமும் இணைத்து வாரியணைத்து பாசத்தைப் பொழிந்து, ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமாகக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு.