இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மக்களாட்சி தழைத்தோங்க, தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், முறையான தேர்தல்கள் நடத்திட தன்னாட்சி பொருந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. அத்தகைய அமைப்பு சமீபகாலமாக நரேந்திர மோடியின் கைப்பாவையாக மாறி வருவது அனைவரையும் கவலையில் ஆழ்த்தி வருகிறது. உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் 16 நாடாளுமன்றத் தேர்தல்களை மிகச் சிறப்பாக நடத்தி பெருமை பெற்ற தேர்தல் ஆணையம் சில ஆண்டுகளாக தமது தனித் தன்மையை இழந்து வருகிறது. மத்திய பா.ஜ.க.வின் கண் அசைவிற்கு ஏற்றாற் போல் செயல்படுகிற அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறி வருகிறது. இந்தப் பின்னணியில் தான் நரேந்திர மோடி மூலம் அ.இ.அ.தி.மு.க. தலைமை 21 சட்டமன்ற தொகுதி தேர்தல்களையும் நடத்தாமல் ஒத்திப் போடுகிற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதுவே அ.தி.மு.க., பா.ஜ.க.வோடு கூட்டணிக்கான பேரங்களில் ஒன்றாக பேசப்படுகிறது. அப்படி தேர்தல் நடந்தால் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் பறிபோகிற நிலை ஏற்பட்டு, ஆட்சி பறிபோகும் என்கிற அச்சத்தின் காரணமாக இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் அ.தி.மு.க. ஈடுபட்டு வருகிறது.