தமிழகத்தில் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு இரண்டு ஆண்டுகால எடப்பாடி அரசின் சாதனைகள் குறித்து அனைத்து நாளேடுகளிலும் அதிக பொருட் செலவில் வண்ணமயமான விளரம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் நாள்தோறும் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. தமிழக மக்களின் எதிர்ப்புகளையும் மீறி ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், நியூட்ரினோ திட்டம், கெயில் எரிவாயு குழாய் பதிப்பு திட்டம், நீட் தேர்வு, மத்திய உயர்கல்வி ஆணையம், மேகதாது அணைக்கட்டு என பல்வேறு முனைகளில் மத்திய பா.ஜ.க. அரசினால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மொத்தம் ஐம்பது உறுப்பினர்களை பெற்றிருக்கிற அ.இ.அ.தி.மு.க., மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்து குரல் கொடுக்கிற துணிவற்ற அரசாக இருந்து வருகிறது. பதினைந்தாவது நிதிக்குழுவின் பரிந்துரைகளையோ, ஜி.எஸ்.டி. அமல்படுத்தியதினால் ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையான ரூபாய் 5300 கோடியை பெறுகிற நிலையிலோ எடப்பாடி அரசு இல்லை. இதுகூட எடப்பாடி அரசின் சாதனையாக கருதலாம்.