வறண்டது மாமண்டூர் ஏரி: விவசாயம் பாதிப்பு
பருவமழை தவறியதால், மாமண்டூர் ஏரி வறண்டு காணப்படுகிறது. இதனால், பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.


பருவமழை தவறியதால், மாமண்டூர் ஏரி வறண்டு காணப்படுகிறது. இதனால், பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் பாலாற்று வடிநில நீர்கோட்ட எல்லையில் அமைந்துள்ளது மாமண்டூர் ஏரி. பொதுப் பணித் துறை பராமரிப்பில் இருந்து வரும் இந்த ஏரி, கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் மகேந்திர வர்ம பல்லவன் காலத்தில் உருவாக்கப்பட்டது. இரண்டு மலைக் குன்றுகளுக்கிடையே கரை கட்டப்பட்டு ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. குன்று உள்பட ஏரிக்கரையின் நீளம் மூன்றரை கிலோ மீட்டர் ஆகும். ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவு மட்டும்தான் கரை அமைக்கப்பட்டுள்ளது. ஏரிக்கரையின் மேல் பகுதியில் உள்ள குன்றுகளில் பல்லவர் கால குடைவரைக் கோயில்கள் அமையப் பெற்றுள்ளன. செய்யாறு தொகுதியில் அமைந்துள்ள இந்த ஏரி, திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகப் பெரிய ஏரியாகும்.
நீர் வரத்துக் கால்வாய்கள்: மாமண்டூர் ஏரிக்கு தண்ணீர் வருவதற்கு வசதியாக ராஜா கால்வாய், வடஇலுப்பை கால்வாய், தண்டரை அணைக்கட்டு கால்வாய் உள்ளிட்ட நீர்வரத்துக் கால்வாய்கள் உருவாக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் பகுதியிலுள்ள பாலாறு, செய்யாறு ஆகியவற்றிலிருந்து ஏரிக்கு தண்ணீர் வந்தடையும் வகையில் மேற்கூறிய கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 13.88 சதுர கி.மீ. பரப்பளவு உள்ள இந்த ஏரி நீரின் கொள்ளளவு 1,799 மில்லியன் கன அடியாகும். தூசி மேட்டு மதகு, பள்ள மதகு மூலம் 1,650 ஏக்கர் நிலங்களும், மாமண்டூர் மேட்டு மதகின் மூலம் 1,401 ஏக்கர் நிலங்களும், பள்ள மதகின் மூலம் 1,067 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. ஏரி ஒரு முறை நிரம்பினால் நான்கு போகம் நெல் சாகுபடி செய்யலாம். குறைந்தபட்சம் 8 மாதங்கள் தண்ணீரை முழுமையாகச் சேமித்து விவசாயம் செய்யலாம். இந்த ஏரி மூலம் தூசி, குரங்குணில்முட்டம், பல்லாவரம், கனிகிலுப்பை, மாமண்டூர், வடகல்பாக்கம், நரசமங்கலம் உள்ளிட்ட 55-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
ஏரியில் ஆக்கிரமிப்பு: பருவமழை தொடர்ந்து பெய்யாததாலும், பாலாறு, செய்யாறு ஆகிய ஆறுகளில் நீர்வரத்து குறைந்ததாலும், நீர்வரத்துக் கால்வாய்கள் சரியாகப் பராமரிக்கப்படாததாலும், மழைக் காலங்களில் இயற்கையாகக் கிடைத்த மழைநீர் சரியாக ஏரிக்கு வராததாலும், மாமண்டூர் ஏரி வறண்டு காணப்படுகிறது. இதனால், பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், மாமண்டூர் ஏரிப் பகுதியில் உள்ளவர்கள் அவரவர் தேவைக்கேற்ப இடத்தை ஆக்கிரமித்து நெல், எள், கீரை உள்ளிட்டவற்றை பயிரிட்டு வருமானத்தை ஈட்டி வருகின்றனர். மேலும், ஏரியின் பல பகுதிகளில் கிணறு தோண்டி மோட்டார் மூலம் நீரைப் பாய்ச்சி விவசாயம் செய்து வருகின்றனர். எனவே, மாமண்டூர் ஏரிக்கு வரும் நீர்வரத்துக் கால்வாய்களைச் சீரமைத்து, பராமரிக்கவும், ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தவும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...