நினைப்பதை பேச முடியாத அகதிகள் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்படுவது ஏன்?: இ.கம்யூ. கேள்வி 

ரயில்வே நிலையங்களில் தான் நினைப்பதை காவலர்களிடம் பேச முடியாது என்று அகதிகள் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்படுவது ஏன்? என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா, முத்தரசன் கேள்வி..
நினைப்பதை பேச முடியாத அகதிகள் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்படுவது ஏன்?: இ.கம்யூ. கேள்வி 
Published on
Updated on
1 min read

சென்னை: ரயில்வே நிலையங்களில் தான் நினைப்பதை காவலர்களிடம் பேச முடியாது என்று அகதிகள் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்படுவது ஏன்? என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா, முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெள்ளியன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தெற்கு ரயில்வேயில் பணியாற்றும நிலைய அதிகாரிகளும், அனைத்துப் பிரிவுகளின் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் தொடர்பு கொள்ள வேண்டும். தவறான புரிதல் ஏற்படாமல் தடுப்பதற்காக, தமிழில் பேசக் கூடாது” என்று ரயில்வேயின் முதன்மை போக்குவரத்து திட்ட மேலாளர் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். பயணிகளின் பாதுகாப்பு பற்றிய உத்தியாகப் பார்வைக்கு இது தெரிந்தாலும, அதன் உள்நோக்கம்  அபாயகரமானது.

தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களும் அயல் மாநிலங்களில் பணிபுரிகிறார்கள். ஆனால் இந்தியைக் கற்றுக்கொண்டு, அவர்கள் மொழியில் பேசி அம்மாநில மக்களுடன் இயங்குகின்றனர். ஆனால் தமிழ் நாட்டுக்கு வடமாநிலத்தவர் பணிபுரிய வந்தால் இங்குள்ள மக்கள் இந்தியைக் கற்றுக்கொண்டு அவர்களோடு பேச வேண்டும் என்ற நியதி வகுக்கப்படுவது தன்னியல்பானது அல்ல.

தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில்  நிலையங்களிலும், தமிழ் நாட்டுப் பயணிகள் அந்நியப்படுத்தப்பட்டு வருகிறார்கள். தமிழையோ, ஊரின்  பெயரையோ கூட புரிந்து கொள்ள முடியாதவர்கள், பயணச்சீட்டு வழங்கும் பணியில் உள்ளனர். தமிழில் பேசமுடியாத, புரிந்துகொள்ள முடியாதவர்கள் ரயில்வே காவலர்களாக இருக்கின்றனர். இப்போது தகவல் தொடர்பும் தமிழில் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. தாய் மொழியில் பேசி ஒரு டிக்கெட் எடுக்க முடியாது, தான் நினைப்பதை காவலர்களிடம் பேச முடியாது என்று அகதிகள் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்படுவது ஏன்?

பணி புரியும் மாநிலத்தின் மொழியறியாதவர்களைக் கொண்டு அதிகார வர்க்க சக்திகள் ஒன்றிணைக்கப்படுவதும், அந்த மொழி தெரிந்தவர்களும் பேசக்கூடாது என உத்தரவிடப்படுவதும், ஒரு அந்நிய நாட்டுப் படையெடுப்பைப் போன்ற தோற்றத்தைத் தருகிறது. இந்திய ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் நேர் விரோதமான பாதையில் மத்திய அரசு செல்வதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கண்டனம் செய்கிறது. தமிழகத்திலுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களைக் கொண்டே அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com