ராகுல் காந்தி பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்பு: ஸ்டாலின் தகவல் 

ராகுல் காந்தி பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்பு: ஸ்டாலின் தகவல் 

சென்னை: ராகுல் காந்தி பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு முடிவான பின்பு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.  அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

2019 நாடாளுமன்ற தேர்தலையொட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமையவுள்ள கூட்டணியில், கட்சிகளுக்கு எத்தனைத் தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து கலந்தாலோசித்து இன்றைக்கு ஒரு முடிவினை நாங்கள் எடுத்திருக்கின்றோம். வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை உள்ளிட்ட 10 தொகுதிகளும், ம.தி.மு.க விற்கு ஒரு மாநிலங்களவை மற்றும் மக்களவை தொகுதியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளும், கொங்கு நாடு கட்சிக்கு 1 தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதியும், இந்திய ஜனநாயக கட்சிக்கு 1 தொகுதியும் சேர்த்து மொத்தம் 40 தொகுதிகளுக்கான தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, திராவிட முன்னேற்றக் கழகம் 20 தொகுதிகளில் போட்டியிடக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கின்றது. இதைத்தொடர்ந்து நாளைய தினம் விருதுநகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பேரணி, ஒரு மிகப்பெரிய மாநாடு போல் நடைபெற இருக்கிறது. அதில் நான் கலந்துகொள்ள செல்கின்றேன். நாளைய தினம் அந்தக் கூட்டம் முடிந்ததற்குப் பிறகு, நாளை மறுநாள் 07ம் தேதியிலிருந்து கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கக் கூடிய எண்ணிக்கையின் அடிப்படையில் எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பதைப் பற்றி, ஏற்கனவே இதற்காக நம்முடைய பொருளாளர் துரைமுருகன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கக்கூடிய அந்தக் குழு, அந்தந்த கட்சிகளின் குழுவோடு கலந்துபேசி அதற்கான பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்.

ம.தி.மு.க எந்தச் சின்னத்தில் போட்டியிடும் என்பது தொடர்பான விவகாரத்தில் எங்களுடைய உணர்வை சொல்லி இருக்கின்றோம், எங்களுடைய எண்ணத்தை, யோசனையை சொல்லி இருக்கின்றோம். அதை அவர்கள் யோசித்து, அவர்கள் முடிவெடுப்பார்கள்.

மனித நேய மக்கள் கட்சித் தலைவரும் இன்று வந்து எங்களைச் சந்தித்தார்கள். இந்த முறை தேர்தல் களத்தில் நின்று போட்டியிடுவதற்கு வாய்ப்பில்லை. எனவே, திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள். வரக்கூடிய காலகட்டங்களில் வாய்ப்பு வருகின்றபோது நிச்சயமாக உங்களை நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம் என்ற உறுதியை நாங்கள் தந்திருக்கின்றோம்.

நாளை நடைபெறவிருக்கின்ற விருதுநகர் பொதுக்கூட்டம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட கூட்டம். கூட்டணிக் கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்கள், வேறு மாவட்டங்களுக்கு வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லவிருக்கின்றார்கள். எனவே, தலைவர்களைப் பொறுத்தவரையில் அந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு வாய்ப்பில்லை. இருந்தாலும், அந்தந்த கட்சியினுடைய மாவட்ட நிர்வாகிகள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றார்கள்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு முறைப்படி திமுக கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் அழகிரி அவர்கள் என்னை வந்து சந்தித்து ராகுல் காந்தி பங்கேற்க்கும் கூட்டத்திற்கு நான் வரவேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். நிச்சயமாக வருவேன் என்று நானும் சொல்லியிருக்கின்றேன். எல்லாக் கட்சித் தலைவர்களையும் அழைக்க இருப்பதாக சொல்லியிருக்கின்றார்கள். எனவே, ராகுல் காந்தி அவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் நிச்சயமாக அனைவரும் பங்கேற்கின்றோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com