நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் முதல் நாளன்று 20 பேர் வேட்பு மனு தாக்கல் 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கியுள்ள முதல் நாளான செவ்வாயன்று 20 பேர் மனு செய்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் முதல் நாளன்று 20 பேர் வேட்பு மனு தாக்கல் 
Published on
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கியுள்ள முதல் நாளான செவ்வாயன்று 20 பேர் மனு செய்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் 2வது கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. 

வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்படும் 26-ஆவது படிவத்தில் கூடுதல் தகவல்களை அளிக்க வேண்டும். அதன்படி, ஒவ்வொரு வேட்பாளரும் தனது 5 ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். முன்னர் இது ஓராண்டாக இருந்தது. தற்போது, 5 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.

அதேபோல வேட்புமனு தாக்கல் செய்பவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தாலோ, ஏதாவது வழக்கில் அவர் தண்டிக்கப்பட்டு இருந்தாலோ, அதையும் அவர் சுட்டிக்காட்ட வேண்டும்.  

அவரது வேட்புமனு ஏற்கப்பட்டதில் இருந்து வாக்குப்பதிவு நடக்கும் தினத்துக்கு முன்பாக மூன்று முறை பிரபல செய்தித் தாள்கள், தொலைக்காட்சி ஊடகங்களில், தன் மீதான வழக்கு விவரங்கள் பற்றிய விளம்பரங்களை வேட்பாளர் அளிக்க வேண்டும்.

வேட்புமனு தாக்கல் செய்ய வரும் பிரமுகருடன், நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மொத்தம் 5 பேர் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அறைக்குள் செல்லலாம். இதேபோல், தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் இருந்து, 100 மீட்டர் தொலைவுக்குள் 3 வாகனங்கள் மட்டுமே செல்வதற்கு அனுமதிக்கப்படும்.  

விடுமுறை காரணமாக சனி, ஞாயிற்றுக்கிழமை  (மார்ச் 23, 24) வேட்புமனுக்கள் பெறப்படமாட்டாது. வரும் 26-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய  கடைசி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 27-இல் மேற்கொள்ளப்பட உள்ளது. 

வேட்புமனு  தாக்கலுக்கென ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் அதற்காக தேர்தல் நடத்தும் அதிகாரியும், உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கியுள்ள முதல் நாளான செவ்வாயன்று 20 பேர் மனு செய்துள்ளனர்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களில்டம் பேசிய தமிழகத் தலைமைத்  தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, '  வடசென்னையில் 4, தென்சென்னையில் 3, திருப்பூர் மற்றும் ராமநாதபுரத்தில் தலா 2 பேர் உள்ளிட்ட மொத்தம் 20 பேர் முதல்நாளன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்'  என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com