அன்று இரட்டை இலை, இன்று குக்கர் சின்னமும் இல்லை: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிடுமாறு கோரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடையாது என்று தீர்ப்பளித்துள்ளது.
அன்று இரட்டை இலை, இன்று குக்கர் சின்னமும் இல்லை: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Published on
Updated on
2 min read

புது தில்லி: டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிடுமாறு கோரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடையாது என்று தீர்ப்பளித்துள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், டிடிவி தினகரனின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

அதே சமயம், தினகரனின் அமமுகவுக்கு பொதுச் சின்னம் ஏதேனும் ஒன்றை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

பதிவு செய்யப்படாதக் கட்சிக்கு பொதுச் சின்னத்தை ஒதுக்கவே முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் கூறிவிட்டதை அடுத்து, குறுகிய காலமே இருப்பதால், காலத்தைக் கருத்தில் கொண்டு அமமுகவுக்கு பொதுச் சின்னத்தை ஒதுக்குமாறு உச்ச நீதிமன்றம் பரிந்துரையை முன் வைத்துள்ளது.

தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல்,  இடைத்தேர்தல் ஆகியவற்றில் தங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன், வி.கே. சசிகலா ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது இறுதிகட்ட விசாரணை நடந்து முடிந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இதுதொடர்பாக கடந்த மார்ச் 5-ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) துணைப் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன்,  வி.கே.சசிகலா ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: தேர்தல் ஆணையம் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கியது சரியே என்று தில்லி உயர்நீதிமன்றம் பிப்ரவரி 28-இல் பிறப்பித்த உத்தரவுக்கும், இபிஎஸ் - ஓபிஎஸ் தலைமையிலான அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடந்த 2017, நவம்பர் 23-இல் பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதிக்க வேண்டும்.  

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடையும் வரையிலும், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும். மக்களவைத் தேர்தல் உள்ளிட்டவற்றில் குக்கர் சின்னத்தையும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பெயரையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இம் மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

ப்போது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகி, தற்சமயம் தேர்தலில் போட்டியிடும் வகையில் பொதுச் சின்னமாக உள்ள குக்கர் சின்னத்தை ஒதுக்கித் தர தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

அப்போது,  எதிர் மனுதாரர்கள் ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆட்சேபம் தெரிவித்து, எங்கள் அணியே உண்மையான அதிமுக, எங்கள் அணிக்கே இரட்டை இலைச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.  டிடிவி தினகரன் தனியாக கட்சியை தொடங்கியுள்ளார் என வாதிட்டார்.

இந்த நிலையில், இன்றை விசாரணையின் போது ஒரு குறிப்பிட்ட சின்னத்தை ஒரு கட்சிக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், இரட்டை இலைச் சின்னம் குறித்த வழக்கு முடிந்து விட்டதால், பழைய முறைப்படி இடைக்காலச் சின்னம் வழங்க வேண்டியதில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பதிவு செய்யப்பட்ட கட்சியா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதைக் கேட்ட டிடிவி தினகரன் தரப்பு வழக்குரைஞர், அமமுகவை  கட்சியாகப் பதிவு செய்யத் தயார், ஆனால் தற்போது அதற்கான நேரம் இல்லை என்று கூறினர்.

பதிவு செய்யப்படாத கட்சிக்கு எப்படி ஒரு பொதுச் சின்னத்தைக் கேட்கிறீர்கள்?  என்றதற்கு, 
 
அமமுகவை கட்சியாக இன்றைக்கே பதிவு செய்யத் தயார். கட்சியை இன்றே பதிவு செய்தால் குக்கர் சின்னம் வழங்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பொதுச் சின்னம் வழங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஒரே நேரத்தில்  இரட்டை இலைச் சின்னத்தையும், குக்கர் சின்னத்தையும் கோருவது ஏன்? என்று கேளவி எழுப்பினர்.

விசாரணையின் போது தேர்தல் ஆணையம் தரப்பில் கூறியதாவது, அமமுகவை கட்சியாக பதிவு செய்தாலும் உடனடியாக குக்கர் சின்னத்தை தர முடியாது என்று  தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

கட்சியைப் பதிவு செய்து 30 நாட்களுக்குப் பிறகுதான் பொதுச் சின்னம் ஒதுக்க முடியும். எனவே, தினகரன் கட்சிக்கு உடனடியாக குக்கர் சின்னத்தை பொதுச் சின்னமாக அளிக்க முடியது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

இதைத் தொடர்ந்து, டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது என்று, தினகரனின் கோரிக்கையை நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com