சென்னை: சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் கோயம்பேடு சந்தை போக்குவரத்து நெரிசல், குடிநீர்ப் பிரச்னை, ஆக்கிரமிப்பு கடைகள் என தொடர் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறது.
கடந்த 1996-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறக்கப்பட்டு இன்று 125 ஏக்கர் பரப்பளவில் செயல்படும் இந்தச் சந்தையில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) கவனம் செலுத்த வேண்டும் என்பது வியாபாரிகள், பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆசியாவில் மிகப் பெரிய சந்தைகளில் ஒன்றாக விளங்கும் சென்னை கோயம்பேடு சந்தையில் பூ, பழம், காய்கறி ஆகியவற்றை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்வதற்காக 3,500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து லாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலம் தினமும் விற்பனைக்காக கொண்டுவரப்படும் காய்கறிகள், பழங்கள் போன்றவை சுற்றுப் பகுதிகளில் உள்ள 65 சில்லறை விற்பனைச் சந்தைகள், ஆயிரக்கணக்கான கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த சந்தையில் குடிநீர், சாக்கடை, மின்சாரம், வாகன நிறுத்தம், மின்சாரம், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரும் பொறுப்பை சிஎம்டிஏ கவனித்து வருகிறது.
இந்த நிலையில் சந்தை வளாகத்தில் 500-க்கும் மேற்பட்டோர் எந்தவித அனுமதியும் இல்லாமல் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட சில்லறை விற்பனைக் கடைகள் அமைத்து இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். இது குறித்து கோயம்பேடு சந்தை மொத்த வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கூறியது: சந்தைக்கு தினமும் லாரி, வேன் உள்பட தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
நெரிசலில் சிக்கும் பொதுமக்கள்: அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் என சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்வதால் அந்த நேரங்களில் சந்தை பரபரப்பாக இயங்கும். இந்த நிலையில் சந்தையின் முன்புற நுழைவாயில்கள், உள்பகுதி, கடைகளுக்குச் செல்லும் நடைபாதைகள் உள்பட சந்தையின் அனைத்துப் பகுதிகளிலும் உரிமம் பெறாத வியாபாரிகள் இடத்தை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர்.
இதனால் அந்த வழிகளில் சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள், பொதுமக்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பெரிதும் இடையூறாக உள்ளது. சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும் ஓரிரு நாள்களில் அதே வியாபாரிகள் பழைய இடத்திலேயே மீண்டும் ஆக்கிரமித்து விடுகின்றனர்.
மலைபோல் குவியும் குப்பைகள்: சந்தை வளாகத்தில் தினமும் குவியும் காய்கறி கழிவுகள், குப்பைகள் பெரும்பாலும் குறித்த நேரத்துக்குள் அகற்றப்படுவதில்லை. இங்கு உள்ள கழிவறைகள் முறையாகப் பராமரிக்கப்படாததால் சந்தை முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் இந்த சந்தையில் பெயரளவுக்குக் கூட குடிநீர் வசதி இல்லை.
இதனால் தனியாரிடம் கேன் குடிநீரை வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். சந்தை நிர்வாகக் குழுவின் சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர்த் தொட்டிகள் பயனற்ற நிலையில் உள்ளன. குடிநீர் வசதியைப் பொருத்த வரையில் கடந்த 23 ஆண்டுகளாக இதே நிலையே நீடிக்கிறது. இது குறித்து சி.எம்.டி.ஏ., சந்தை நிர்வாகக் குழுவிடம் எத்தனையோ முறை புகார் அளித்து விட்டோம்.
பெயருக்கு மட்டும் சில நாள்கள் கண்காணித்து விட்டு பின்னர் மீண்டும் பராமரிப்பு பணிகள் கிடப்பில் போடப்படுகின்றன. ஆண்டுக்கு ரூ.2 கோடிக்கு மேல் பராமரிப்புக் கட்டணத்தை வசூலிக்கும் சந்தை நிர்வாகம் பொதுமக்கள், தொழிலாளர்கள், வியாபாரிகளின் நலன் கருதி பராமரிப்புப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என்றனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, விதிமுறையை தொடர்ந்து மீறும் வியாபாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஆலோசனை நடத்தி வருகிறோம்.
பொதுமக்கள், வியாபாரிகளின் நலன் கருதி குடிநீர் வசதி ஏற்படுத்த டெண்டர் கோரவுள்ளோம். மேலும் போதிய அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
மகளிருக்கு இலவச பேருந்து சேவை! கேரள முதல்வர் தொடக்கி வைத்தார்!

ஜூன் 15: தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!

தமாகாவில் இருந்து யுவராஜா விலகல்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



