அம்மா உணவகம் போல் நாடு முழுவதும் சமுதாய உணவுக்கூடம்:  மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்  

அம்மா உணவகம் போல் நாடு முழுவதும் சமுதாய உணவுக்கூடங்களை அமைப்பது தொடர்பாக ஆராய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அம்மா உணவகம் போல் நாடு முழுவதும் சமுதாய உணவுக்கூடம்:  மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்  
Published on
Updated on
1 min read

புது தில்லி: அம்மா உணவகம் போல் நாடு முழுவதும் சமுதாய உணவுக்கூடங்களை அமைப்பது தொடர்பாக ஆராய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்கள் அனுன் தவண், இஷான் சிங் தவண் மற்றும் குங்ஜன் சிங் ஆகியோர் சார்பில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் நாள்தோறும் பட்டினியாலும், ஊட்டச்சத்துக் குறைவாலும் இறக்கும் நிலை உள்ளது, இது அரசியல் அமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் முற்றிலும் மீறுவதாகும். எனவே மத்திய சார்பில் தேசிய உணவுக் கழகம் அமைத்து பொது விநியோகம் மூலம் உணவு வழங்கிட வகை செய்ய வேண்டும்.

ஏற்கனவே மாநில அரசுகள் சார்பில் தமிழகத்தில் அம்மா உணவகம், ராஜஸ்தானில் அன்னபூர்ணா ரசோய், கர்நாடகாவில் இந்திரா கேண்டீன், டெல்லியில் ஆம் ஆத்மி கேண்டீன், ஆந்திராவில் அண்ணா கேண்டீன், ஜார்கண்டில் முக்கியமந்திரி தல் பாட் மற்றும் ஒடிசாவில் ஆஹார் சென்டர் என்று உணவு மையங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இவற்றில் ஏழை மக்களுக்கு மானிய விலையில் தரமான, சுவையான உணவுகள் மூன்று வேளையும் வழங்கப்படுகின்றன.

முன்னரே மத்திய அரசின் சார்பில் பல்வேறு அமைச்சகங்கள் சார்பில் பட்டினியைப் போக்கவும், ஊட்டச்சத்தின்மையைப் போக்கவும், பசிக்கு உணவிடவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  ஆனாலும் உண்மையில் அந்தத் திட்டங்கள் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சர்வதேச அமைப்புகள் அளிக்கும் புள்ளிவிவரங்கள் படி, இந்தியாவில்  ஆண்டுக்கு 3 லட்சம் குழந்தைகள் பட்டினியால் இறக்கின்றன எனத் தெரியவருகிறது. அதில் 38 சதவீதம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.

எனவே  சமுதாய உணவுக்கூடம் அமைத்தலை மாநில அரசுகள் உதவியுடனோ அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி மூலமோ அல்லது தனியார் அரசு பங்களிப்பு மூலமோ ஏற்கெனவே இருக்கும் திட்டங்களோடு இணைத்து நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்'.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா முன் திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த திட்டத்தை நாடுமுழுவதும் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com