புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இணையதளம் வாயிலாக 98% ரயில் பயணச்சீட்டுகள் விற்பனை: தீவிர முயற்சியில் ஐ.ஆர்.சி.டி.சி.

இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படும் ரயில் பயணச்சீட்டு விற்பனையை 70 சதவீதத்தில்  இருந்து 98 சதவீதமாக அதிகரிக்க

News image
Updated On :4 செப்டம்பர் 2019, 9:12 pm

மு. வேல்சங்கர்


இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படும் ரயில் பயணச்சீட்டு விற்பனையை 70 சதவீதத்தில்  இருந்து 98 சதவீதமாக அதிகரிக்க  இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
இதற்காக, நவீன கால பயணச்சீட்டு  முறை மென்பொருளை பயன்படுத்த முயற்சி எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, இந்த மென்பொருளை ஐ.ஆர்.சி.டி.சி. வசம் ரயில்வே நிர்வாகம் ஒப்படைக்கக் கூடாது என்று ரயில்வே தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ரயில்வே பொதுத்துறை நிறுவனம்: இந்தியன் ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனமாக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) உள்ளது. 
இந்த நிறுவனம் ரயில்வேயில்  உணவு, சுற்றுலா, இணையதள பயணச்சீட்டு முன்பதிவு ஆகியவற்றை கையாளுகிறது. இதில், இணையதளம் மூலம் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வது தற்போது மிகவும் பிரபலமடைந்துள்ளது.
2015-ஆம் ஆண்டில் 3 கோடி பேர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் பதிவு செய்து பயன்படுத்தினர். தினசரி சராசரியாக 6 லட்சம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். இது படிப்படியாக உயர்ந்து வந்தது. 
ரூ.32,069 கோடி வருவாய்: தற்போது, விரைவு ரயில், சிறப்பு ரயில்கள் ஆகியவற்றில் பயணம் மேற்கொள்ள பயணிகள் பெரும்பாலோர் இணையதளம் மூலம் பதிவு செய்து பயணித்து வருகின்றனர். ஐ.ஆர்.சி.டிசி. நிறுவனம்  கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் மட்டும் 28.41 கோடி குறுஞ்செய்தி மற்றும் இ.டிக்கெட்டுகளை ரயில் பயணத்துக்காக வழங்கியது. இதன் மூலம், 49 கோடியே 49 லட்சம் பேர் ரயில்களில் பயணம் மேற்கொண்டனர்.
இந்தப் பயணச்சீட்டுகள் விற்பனையால் மட்டும் ஐ.ஆர்.சி.டி.சி.க்கு 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.32,069 கோடி வருவாய் கிடைத்தது. இதுதவிர, கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் ஆண்ட்ராய்டு செயலி மூலம் 10 கோடியே 18 லட்சம் பேர் முன்பதிவு செய்தனர். ஐ.ஆர்.சி.டி.சி.  இணையதளம் மூலமாக, பயணச்சீட்டு முன்பதிவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 
பயணச்சீட்டு விற்பனையை உயர்த்த திட்டம்: இந்நிலையில், இணையதளம் வாயிலான ரயில் பயணச்சீட்டு  விற்பனையை  70 சதவீதத்தில் இருந்து 98 சதவீதமாக அதிகரிக்க ஐ.ஆர்.சி.டி.சி. தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக, நவீன கால பயணச்சீட்டு முறை   என்ற மென்பொருளை பயன்படுத்த முயற்சி எடுத்துள்ளது. இந்நிலையில், இதை ஐ.ஆர்.சி.டிசி. வசம் ரயில்வே நிர்வாகம்  ஒப்படைக்கக் கூடாது என்று ரயில்வே தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது. 
மென்பொருளை ஒப்படைக்கக் கூடாது: இது குறித்து தட்சிண ரயில்வே தொழிலாளர்கள் சங்க துணை பொதுச்செயலாளர் மனோகரன் கூறியது: ஐ.ஆர்.சி.டி.சி.  தற்போது பயணச் சீட்டு விற்பனையை 98 சதவீதமாக உயர்த்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 
ரயில்வே வசம் உள்ள 30 சதவீத நேரடி கவுன்ட்டர்கள் விற்பனையை கையகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. ரயில்வேயின் தகவல் அமைப்பு மையம் (கிரிஸ்) முன்பதிவுக்கு  கையாளும்  நவீன கால பயணச் சீட்டு முறை என்ற மென்பொருளை ஐ.ஆர்.சி.டி.சி கட்டுப்பாட்டில் எடுக்கவுள்ளது. 
இந்த மென்பொருள் துணையோடு இணையதள முன்பதிவு வேகத்தை ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் அதிகரிக்கவோ, ரயில்வே கவுன்ட்டர்களில் முன்பதிவு வேகத்தை குறைக்கவோ முடியும். 
இணையதளம்  வேகத்தை ரயில்வே கவுன்டர்களில் குறைத்தால், தத்கல் மற்றும் முன்பதிவு தொடங்கும் நாளில் முன்பதிவு செய்வதற்கு ரயில்வேயை பயணிகள் அணுக மாட்டார்கள். ஒருசில சலுகை கட்டண முன்பதிவுக்கு மட்டும் ரயில்வே கவுன்டர்கள் இயங்கும் சூழல் உருவாகும். இதனால், ரயில்வே பயணச்சீட்டு விற்பனையாளர் வேலை இழக்கும் நிலை ஏற்படும். 
எனவே, இணைய தள டிக்கெட் விற்பனையை அதிகப்படுத்த இந்த மென்பொருளை ஐ.ஆர்.சி.டி.சி. வசம் ரயில்வே நிர்வாகம் ஒப்படைக்க கூடாது என்றார் அவர்.
பயணிகள் தேவை பூர்த்தி செய்யப்படும்: இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இணையதளம் வாயிலாக பயணச் சீட்டு முன்பதிவுக்கு மக்கள் மத்தியில் தேவை அதிகரித்து வருகிறது. ஒரு நிமிடத்துக்கு சராசரி ரூ.24 ஆயிரம் பயணச் சீட்டுகள் பதிவு செய்யப்படுகின்றன. பயணிகள் தேவைக்கு ஏற்ப தொழில்நுட்பத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். பயணிகளின் தேவை பூர்த்தி செய்யப்படும் என்றார் அவர்.
387 தரகர்கள் கைது
மொத்த பயணச் சீட்டு விற்பனையில் 20 சதவீதம் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலம் நடைபெறுகின்றன. சட்டவிரோத தரகர்கள் முன்பதிவில் ஈடுபடுகிறார்கள். கடந்த ஜூன் 13-ஆம் தேதி நாடு முழுவதும் 205 நகரங்களில் நடைபெற்ற சோதனைகளில் 387 தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.  ரூ.36.92 லட்சம் மதிப்பிலான பயணச் சீட்டுகள் ரத்து செய்யப்பட்டன. 2,564 போலி ஐ.டி.க்கள் செயல் இழக்கம் செய்யப்பட்டன.
வருவாய் உயர்வு
ஐ.ஆர்.சி.டி.சி.  நிறுவனம் கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் மட்டும் 24.66 கோடி குறுஞ்செய்தி மற்றும் இ.டிக்கெட்டுகளை ரயில் பயணத்துக்காக வழங்கியது.
 இது கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் மட்டும் 28.41 கோடி குறுஞ்செய்தி மற்றும் இ.டிக்கெட்டுகளாக உயர்ந்தது.
இணையதளம் டிக்கெட் மூலமாக பதிவு செய்து, ரயில்களில் 2018-19-ஆம் ஆண்டில் மொத்தம் 49 கோடியே 49 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர்.  2017-18-ஆம் ஆண்டில் 43 கோடியே 40 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர். இணையதள பயணச் சீட்டு விற்பனை மூலமாக 2017-18-ஆம் ஆண்டில் ரூ.28,475  கோடி வருவாய் கிடைத்தது. இது 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.32,069 கோடியாக உயர்ந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.