விவசாயத்துக்கான நகைக்கடன் ரத்து: அதிர்ச்சியில் தமிழக விவசாயிகள்!

நகைக்கடனை மத்திய அரசு அதிரடியாக  ரத்து செய்து அறிவித்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.
விவசாயத்துக்கான நகைக்கடன் ரத்து: அதிர்ச்சியில் தமிழக விவசாயிகள்!

சிதம்பரம்: தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில்  விவசாயத்திற்கு வழங்கும் நகைக்கடனை மத்திய அரசு அதிரடியாக  ரத்து செய்து அறிவித்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.
 
நாடு முழுவதும் சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள் என்ற வகையில் நிலத்தின் உடமையாளராக மத்திய மாநில அரசுகள்  தரம் பிரித்து வைத்துள்ளன. இதில் பெரும்பாலான விவசாயிகள் நில உடமையாளர்கள், பட்டாதாரர் எனவும் அடமானம் பேரில் சாகுபடி செய்பவரை போக்கிய சாகுபடியாளர் எனவும், குத்தகை அடிப்படையில் சாகுபடி செய்பவரை குத்தகை சாகுபடியாளர் எனும் நடைமுறை தற்போது உள்ளது. இதில் நேரடி பட்டதாரர் தனது சிட்டா, அடங்கல், ஆகிய ஆவணங்களை வங்கிகளில் சமர்பித்து மாவட்ட தொழில் நுட்பகுழுவினர் பரிந்துரைக்கும் தொகையை அங்கிகரித்து பயிர் சாகுபடி செலவாக கருதி பயிர் கடன் தொகையை நிர்ணயிப்பது வழக்கம். இந்த முறையில் நேரடி பட்டாதாரர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது வேளாண்மை தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் பெற்று சாகுபடி செய்து வருகின்றனர். போக்கிய சாகுபடி விவசாயிகள் மற்றும் குத்தகை சாகுபடி விவசாயிகள் பயிர்கடன் பெற முடியாமல் குறைந்த வட்டியில் நகையை அடமானம் வைத்து அதனுடன் சாகுபடி செய்வதற்கான ஆவனங்களை இனைத்து வங்கிகளில் கொடுத்து நகைகடன் பெற்று  சாகுபடி செய்து வருகின்றனர்.

விவசாயத்திற்கான நகைக்கடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் பெற்று திரும்ப செலுத்தும் காலம் 10 மாதத்திற்குள் செலுத்தினால் வட்டி கட்ட வேண்டிய அவசியம் இல்லை. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நகைக்கடன் பெற்றால் 12 மாத கால இடைவெளியில் 4 சதவிகிதம் வட்டிக்கட்டினால் போதும். இதனால் பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி செலவுக்கு நகைக்கடன் பெரும் உதவியாக இருந்தது.  இந்த நடைமுறயில் பல தவறுகள் நடப்பதாகவும், விவசாயிகள் அல்லாதவர்கள் பலனடைவதாகவும் மத்திய நிதித்துறை நாடுமுழுவதும் விவசாயத்திற்கான நகைகடனை முழுமையாக ரத்து செய்திருப்பது வேதனைக்குறியது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் போதிய பணம் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

இதுகுறித்து காவிரி விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கம் பொதுச்செயலாளர் பெ.ரவீந்திரன் தெரிவித்தது: சமீப காலமாக விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் சாகுபடியில் போதிய வருமானம் இல்லாமல் சொற்ப தொகையே கிடைத்து வருகிறது. இதனால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் பெற்ற விவசாயிகள் கடன் தொகையை ஆண்டுதோறும் தொகையாக திரும்ப செலுத்த போதிய பணம் இல்லாததால் கடனை புதுப்பித்தல் முறையே செய்துவருகிறார்கள். காரணம் அறுவடை செய்த விளைபொருளை விற்றால் லாபகரமான விலை கிடைக்காமல் இடைதரகர்கள் நிர்னயித்த விலைக்கு விற்பனை செய்து கிடைக்கும் சொற்ப தொகையை கொண்டு குடும்பத்தை நிர்வகிக்க வேண்டிய கட்டாயத்தால் கடனை திரும்ப செலுத்த முடியாமல் புதுப்பித்தல் நடைமுறையை பின்பற்ற வேண்டியுள்ளது. நேரடியாக பட்டா ஆவணங்களைக்கொண்டு கடன் பெற்ற விவசாயிகளும் தொடர்ந்து ஆண்டுதோறும் கடனை புதுப்பித்து சாகுபடிக்கு தேவையான தொகையை விவசாயத்திற்கான நகைக்கடன் மூலம் பெற்று சாகுபடி செய்து வருகின்றனர். இனி வரும் காலங்களில் சாகுபடி பணிக்கு தேவையான தொகையை வங்கிகளில் 9.5 சதவிகித வட்டியில் விவசாயிகள் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் கடன் சுமை ஏற்படும். கடந்த காலங்களில் பெரும்பாலான விவசாயிகள் தனியார் நிதி நிறுவனங்களில் வட்டி, மீட்டர் வட்டி மற்றும் தண்டல் ஆகிய முறைகளில் கடன் பெற்று சாகுபடிக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனதை நினைவில் கொள்ள வேண்டும். இதனால் பெரும்பாலான விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

விவசாயத்திற்கு வழங்கப்படும் நகைக்கடன் வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்கள் பலன் அடைந்து வருகின்றனர் எனவும் அதை தடுக்கவே திட்டத்தை அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் ரத்து செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது எனவும் காரணம் கூறும் மத்திய நிதி துறை அமைச்சகம் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி செயல்பாட்டு முறையில் தவறுகளை கண்டறிந்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மாறாக திட்டத்தை  ரத்து செய்வது முறையல்ல. இதனால் உண்மையான விவசாயிகள்  பாதிக்கப்படுவார்கள். பாரதபிரதமர் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு உயர்த்த மத்திய அரசு முனைப்புடன் செயல்படுவதாகவும், 2022 ஆம் ஆண்டுக்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி விடுவோம் என ஒருபுறம் தான் பங்கேற்கும் அனைத்து  கூட்டங்களிலும் பேசிவருகிறார். மறுபுறம் மத்திய அரசின் பல துறைகளில் விவசாயிகளுக்கான சலுகைகள் ரத்து செய்யப்படுகின்றன. சமீபகாலமாக  மத்திய அரசு விவசாயிகளை விவசாயத்தை விட்டு வெளியேற்றும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்த துவங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஏற்கனவே செயல்படுத்தப்படும் விவசாயிகளுக்கு சாதகமான திட்டங்களை ரத்து செய்வது மற்றும் திருத்தம் செய்வது விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு  எதிரான செயலாகும். எனவே மத்திய நிதித்துறை விவசாயத்திற்கான நகைக்கடன் ரத்து அறிவிப்பை உடனே தேசிய விவசாயிகளின் நலனை கருதி திரும்ப பெறவேண்டும் என்கிறார் பெ.ரவீந்திரன்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com