இங்குள்ள அ.தி.மு.க அரசோ, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வட மாநில இளைஞர்களை ‘இஞ்சினியர்களாக’ தேர்வு செய்கிறது. ஏன், தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் நடைபெறும் தேர்வுகளை வட மாநிலத்தவர் எழுதலாம் என்று கூறி - இப்போது 176 சிவில் நீதிபதிகள் பதவிக்கு நடைபெறப் போகும் தேர்விலும் வட மாநில இளைஞர்கள் தேர்வு எழுதலாம் என்று சூசகமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 9.9.2019 அன்று தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வெளியிட்டுள்ள விளம்பர எண் 555/2019-ல் ‘தமிழ் தெரியாதவர்களும் தேர்வு எழுதலாம்’ என்று கூறப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்றங்களுக்கும் அகில இந்திய அளவில் தேர்வு என்று மத்திய அரசு நினைக்கும் போதே, மாநில அரசு ‘சிவில் நீதிபதிகள்’ தேர்வுகளை வட மாநிலத்தவரும் எழுதும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 90 லட்சம் இளைஞர்களுக்கு மேல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு, இலவு காத்த கிளிகளைப் போல் காத்திருக்கும் இந்த நெருக்கடியான சூழலில், மத்திய பா.ஜ.க அரசும், அ.தி.மு.க அரசும் போட்டிப் போட்டுக் கொண்டு தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களையெல்லாம் வட மாநிலத்தவருக்கு வாரி வழங்கி - தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதை இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது.