
கீழடியில் சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 6-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும் என தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.
தமிழக அரசின் அருங்காட்சியகங்கள் துறை மற்றும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைகளில் நிறைவு பெற்றுள்ள பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அருங்காட்சியக செயலி, எழும்பூர் மானிடவியல் கூடத்தில் புத்தாக்கம் செய்யப்பட்ட இசைக் கருவிகள் காட்சிக் கூடம், நிரந்தரக் காட்சிக் கூடத்தில் தேர் மரச் சிற்பங்கள், நவீன ஓவியங்களுக்கான விரிவாக்க காட்சிக்கூடம், தொல்லியல் துறையின் மேம்படுத்தப்பட்ட வலைதளம் ஆகியவற்றை அமைச்சர் க.பாண்டியராஜன் தொடக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, தொல்லியல் துறையின் கீழடி- வைகை நதிக் கரையில் சங்ககால நகர நாகரிகம் நூலை அமைச்சர் க.பாண்டியராஜன் வெளியிட்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்கள் கூறியது:
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5-ஆம் கட்ட ஆய்வுகள் அடுத்த மாதத்தில் முடிந்துவிடும். அடுத்தகட்ட ஆய்வுகள் கண்டிப்பாக நடைபெறும்.
அதை இன்னும் கொஞ்சம் ஆழமாக, ஆக்ஸ்ஃபோர்டு போன்ற சர்வதேச பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொள்ள விரும்புகிறோம். அதற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. அதே நேரத்தில், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்துடனும் இணைந்து பணியாற்றுவோம்.
கீழடி நாகரிகம் தொடர்பாக நூல் தமிழக அரசு சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மத்திய கலாசாரத் துறை அமைச்சகத்தின் உதவியுடன் இதை பிரதமர் வரை எடுத்துச் செல்ல திட்டமிடப்படப்பட்டுள்ளது. நமது முதல்வர் மூலமாக, அதிகாரப்பூர்வமாக பிரதமர் மோடியின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படும்.
தமிழர் நாகரிகம் என்பது ஒரு வகையில் பாரதத்தின் நாகரிகம்தான். பாரதத்தின் பழம்பெருமை பெற்ற மாமல்லபுரத்தில் இருந்து பிரதமர் மோடி, சீனப் பிரதமருடன் உரையாற்ற உள்ளார்.
கீழடியின் பெருமைகளை அவர் கண்டிப்பாக மனதில் வைத்துக் கொள்வார் என்று நம்புகிறோம். தமிழகத்தில் இசைக்கருவி அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இது குறித்த முழுமையாக தகவல்கள் வெளியிடப்படும் என்றார்.
எந்தெந்த இடங்களில்...: முன்னதாக, தொல்லியல் துறை முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் கூறுகையில், அடுத்தகட்டமாக கீழடிக்கு அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்ய இருக்கிறோம். ஆதிச்சநல்லூரிலும் புதிதாக ஆய்வுகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், கொந்தகை ஆதிகால மனிதர்களைப் புதைக்கும் நிலமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இங்கு கிடைக்கும் எலும்புகளின் மரபணுவை ஆய்வு செய்ய மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், ஹாவர்ட் மெடிக்கல் ஸ்கூல் ஆகியோருடன் இணைந்து செயல்படவிருக்கிறோம் என்றார்.
இந்த விழாவில், அரசு அருங்காட்சியக உதவி இயக்குநர் ஜா.மோ.காந்திமதி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் இயக்குநர் கவிதா ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.