

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மெய்வழி சாலை கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது உங்களுக்குத் தெரியுமா?
ஆம், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, புதிய வாகனச் சட்டத்தால் பைக் இல்லாதவர்கள் கூட ஹெல்மெட் வாங்கச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அட ஆமாங்க, பின்னால் உட்கார்ந்து செல்லவும் ஹெல்மெட் வேணும்ல... அதற்காகத்தான்.
ஆனால், இந்த கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் ஹெல்மெட் விற்பனை செய்யும் கடை எந்த திசையில் இருக்கிறது என்று கூட எட்டிப் பார்க்கவில்லை.
மேலும் படிக்க.. பேருந்து ஓட்டுனரை ஹெல்மெட் போடச்சொன்னால் எப்படி...?
அதாவது, மெய்வழி சாலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மெய்வழி சபா என்ற மதத்தைப் பின்பற்றுகிறார்கள். இவர்கள் எப்போதும் தலையில் தலைப்பாகை அணிந்திருக்க வேண்டும். இவர்களது மத நம்பிக்கையில் அடிப்படையில் இவர்களுக்கு ஹெல்மெட் அணிவதில் இருந்து தமிழக அரசு விலக்கு அளித்து 2007ம் ஆண்டே விதிமுறை வகுத்துள்ளது.
இது குறித்து மெய்வழி சாலை கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் கூறுகையில், எங்கள் மத நம்பிக்கையின் அடிப்படையில் ஆண்கள் எப்போதும் தலைப்பாகை அணிந்து கொண்டிருக்க வேண்டும். ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்ட பிறகு எங்கள் மதத்தினர் சார்பில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சீக்கியர்களைப் போல நாங்களும் தலைப்பாகை அணிந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். எனவே, ஹெல்மெட் அணிவதில் இருந்து எங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசே உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு நகலை நாங்கள் கைவசம் வைத்திருப்போம், ஹெல்மெட் அணியாமல் எங்களை காவல்துறையினர் நிறுத்தினால் அப்போது அந்த ஆணையைக் காண்பிப்போம் என்று தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.